2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தோற்ற நடப்புச் சம்பியன்கள் சிற்றி

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.

இப்போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே மன்செஸ்டர் சிற்றியின் பின்களத்தை தாண்டி ஊடறுத்துச் சென்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டர்ரேஸின் முன்களவீரர் பற்றிக் குர்த்துன்னே, கோல் கம்பத்தை நோக்கிய தனது உதையை கோல் கம்பத்துக்கு வெளியால் செலுத்தியிருந்தார்.

பின்னர், மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான றியாட் மஹ்ரேஸ் பந்தைப் பறிகொடுத்த நிலையில் வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் முன்களவீரர் ராவுல் கிம்மென்ஸ் முன்னேறிச் சென்றபோதும் அவரின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரர் பெர்ணான்டின்ஹோவால் தடுக்கப்பட்டிருந்ததுடன், இதைத் தொடர்ந்து பற்றிக் குர்த்துன்னே உதைத்த பந்து பெர்ணான்டின்ஹோவின் தலையில் பட்டிருந்தது.

தொடர்ந்த போட்டியின் 22ஆவது நிமிடத்தில், மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரர் நிக்கொலஸ் ஒட்டமென்டியின் மோசமான பந்துப்பரிமாற்றத்தால் மீண்டும் ராவுல் கிம்மென்ஸ் முன்னேறியபோதும் அவரை மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் அவரைத் தடுத்திருந்தார்.

இவ்வாறாக போட்டியின் முதற்பாதியானது கோலெதுவும் பெறப்படாத நிலையில் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்திருந்த நிலையில், போட்டியின் 67ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான டேவிட் சில்வா செலுத்திய பிறீ கிக்கானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான ஜோவா கான்செலோ பந்தை இழந்த நிலையில், முன்னேறிச் சென்ற ராவுல் கிம்மென்ஸ் கொடுத்த பந்தை அவரின் சக மத்தியகளவீரரான அடமா தரோரே கோலாக்க வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் முன்னிலை பெற்றது.

பின்னர், போட்டியின் இறுதி நிமிடங்களில் மீண்டும் ராவுல் கிம்மென்ஸ் வழங்கிய பந்தை அடமா தரோரே கோலாக்க இறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி தோல்வியடைந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை டேவிட் லூயிஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில், செளதாம்டனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக, தம்மி ஏப்ரஹாம், மேஸன் மெளன்ட், என்கலோ கன்டே, மிச்சி பச்சுவாய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செளதாம்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டனி இங்ஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை, நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்தது. நியூகாசில் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மத்தியூ லோங்ஸ்டாஃப் பெற்றிருந்தார்.

இப்போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசை பின்வருமாறு,

நிலை  அணி           போட்டிகள் கோல் வித்தியாசம்  புள்ளிகள்

  1. லிவர்பூல்               8                         14                           24
  2. சிற்றி                      8                         18                           16
  3. ஆர்சனல்               8                          2                            15 
  4. லெய்செஸ்டர்      8                          7                            14
  5. செல்சி                    8                          4                            14

9. டொட்டென்ஹாம் 8                          2                             11

12. யுனைட்டெட்         8                          1                             9

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .