2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தோற்றது றியல் மட்ரிட்

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஜிரோனாவுடனான போட்டியில் றியல் மட்ரிட் தோற்றது.

இப்போட்டியின் 25ஆவது நிமிடத்தில், சக மத்தியகள வீரர் டொனி க்றூஸிடமிருந்து, நீண்ட தூரத்திலிருந்து  வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய இன்னொரு மத்தியகள வீரரான கஸேமீரோ, றியல் மட்ரிட்டுக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், றியல் மட்ரிட்டின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸின் கையில் பந்து பட்டதன் காரணமாக, இரண்டாவது பாதியின் 65ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை ஜிரோனாவின் முன்கள வீரர் கிறிஸ்தியன் ஸ்டுவானி கோலாக்க கோலெண்ணிக்கை சமமானது.

பின்னர், சக முன்கள வீரர் அந்தோனி லொஸானோ கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய பந்து தடுக்கப்பட்டு வர பாய்ந்து போட்டியின் 75ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி மத்தியகள வீரர் போர்து கோலாக்கியதோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜிரோனா வென்றது.

இப்போட்டியின் இறுதி நிமிடங்களில், பெனால்டியின்போது பெற்ற தனது முதலாவது மஞ்சள் அட்டையைத் தொடர்ந்து, தலைக்கு மேலால் உதைய முற்பட்டபோது ஜிரோனாவின் பின்கள வீரர் பெட்ரோ அல்காலாவைத் தாக்கிய றியல் மட்ரிட்டின் பின்கள வீரர் சேர்ஜியோ றாமோஸ், இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்று, சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

குறித்த சிவப்பு அட்டையானது, லா லிகாவில் றாமோஸ் பெறும் 19ஆவது சிவப்பு அட்டை என்ற நிலையில், லா லிகாவில் வேறெந்த வீரரையும் விட சேர்ஜியோ றாமோஸே அதிக சிவப்பு அட்டைகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற வில்லாறியலுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் செவியா தோல்வியடைந்ததுடன், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற றியல் பெட்டிஸுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அலாவேஸ் சமநிலையில் முடித்திருந்தது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு,

  1. பார்சிலோனா 54 புள்ளிகள்
  2. அத்லெட்டிகோ மட்ரிட் 47 புள்ளிகள்
  3. றியல் மட்ரிட் 45 புள்ளிகள்
  4. செவியா 37 புள்ளிகள்
  5. கெட்டாபே 36 புள்ளிகள்
  6. அலாவேஸ் 36 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .