2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நடப்புச் சம்பியன்களை வீழ்த்தியது கொல்கத்தா

Gopikrishna Kanagalingam   / 2017 மே 18 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இறுதிச் சுற்றில், வெளியேற்றப் போட்டியில், நடப்புச் சம்பியன்களான சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2ஆவது தகுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

பெங்களூருவில் இடம்பெற்ற இந்தப் போட்டி, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நேற்று அதிகாலை 1:27 மணிக்கே நிறைவடைந்தது. இடைப்பட்ட நேரத்தில், கடுமையான மழை காரணமாக, போட்டி பாதிக்கப்பட்டிருந்தது.

துடுப்பெடுத்தாடுவதற்குக் கடினமான ஆடுகளத்தில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஹைதரபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.  துடுப்பாட்டத்தில் டேவிட் வோணர் 37 (35), கேன் வில்லியம்ஸன் 24 (26), விஜய் ஷங்கர் 22 (17) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் நேதன் கோர்ட்டர் நைல் 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஹைதரபாத் அணியின் இறுதி ஓவரில் ஆரம்பித்த மழை, தொடர்ச்சியாக நீடித்தது. இறுதியில், அதிகாலை 12:55 மணிக்கு, கொல்கத்தா அணியின் இனிங்ஸ் ஆரம்பித்தது. அவ்வணிக்கு, 6 ஓவர்களில் 48 ஓட்டங்கள், இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

அவ்வணி, 1.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், அணித் தலைவர் கௌதம் கம்பீர், தனியாக நின்று, வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அவர், 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் நாயகனாக, நேதன் கோர்ட்டர் நைல் தெரிவானார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இறுதிப் போட்டிக்கான 2ஆவது அணியைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதிப் போட்டிக்கு, கொல்கத்தா அணி தகுதிபெற்றது. அவ்வணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன், இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில் மோதவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .