2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நடாலுக்கு 10ஆவது பட்டம்

Editorial   / 2017 ஜூன் 12 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவில், ஸ்டான் வவ்றிங்காவைத் தோற்கடித்த ரபேல் நடால், தனது 10ஆவது பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

ஸ்பெய்னின் நடால், களிமண்தரைப் போட்டிகளில், வழக்கமாகவே ஆதிக்கத்தைச் செலுத்தும் ஒருவர் என்ற போதிலும், சுவிற்ஸர்லாந்தின் வவ்றிங்காவை அவர் எதிர்கொண்டு வெற்றிகொண்ட விதம், முழுமையான ஆதிக்கமாக அமைந்தது.

முதலாவது செட்டை, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை, 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். தீர்க்ககரமான மூன்றாவது செட்டை, 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய நடால், சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்தத் தொடர் முழுவதும், 35 புள்ளிகளை மாத்திரம் விட்டுக் கொடுத்த நடால், இறுதிப் போட்டியில், வெறுமனே 6 புள்ளிகளையே விட்டுக் கொடுத்திருந்தார். 2008ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில், ரொஜர் பெடரரை, 4 புள்ளிகள் மாத்திரம் பெற அனுமதித்தமைக்குப் பின்னர், நடால் பெற்றுக் கொண்ட, ஆதிக்கம் மிகுந்த வெற்றியாக இது மாறியது.

நடாலின், 15ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டமாக அமைந்த இந்த வெற்றி, அவரது 10ஆவது பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும். இதன்மூலம், ஒரே வகையான கிரான்ட் ஸ்லாம் தொடரில், 10 சம்பியன் பட்டங்களைப் பெற்ற முதலாமவர் என்ற சாதனையை, நடால் படைத்தார்.

இதன்மூலம், ஐக்கிய அமெரிக்காவின் பீற் சாம்ப்ராஸை முந்திய நடால், அதிக கிரான்ட் ஸ்லாம்களை வென்றவர்களின் பட்டியலில், இரண்டாமிடத்துக்கு முன்னேறினார். முதலாவது இடத்தில், 18 பட்டங்களோடு, சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் காணப்படுகிறார்.

வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த நடால், "இது மிகவும் அற்புதமானது. 10ஆவது தடவையாக வெற்றிபெற்றமை, மிக, மிக விசேடமானது. நான் இப்போது கொண்டுள்ள உணர்வு, விவரிக்கப்படக் கடினமானது" என்று தெரிவித்தார்.

ஏனைய தொடர்களோடு, இந்தத் தொடரை ஒப்பிடுவது கடினமானது என்று தெரிவித்த நடால், எனினும், இந்தத் தொடரில் தனக்குக் கிடைக்கும் உற்சாகம், வேறு இடங்களில் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .