2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நடால் அதிரடி; 16ஆவது கிரான்ட் ஸ்லாமை வென்றார்

Editorial   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை வீரராக அண்மையில் அறிவிக்கப்பட்ட ஸ்பெய்னின் ரபேல் நடால், ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், தனது ஆதிக்கம்மிகுந்த விளையாட்டை வெளிப்படுத்திவந்த நிலையில், இறுதிப் போட்டியில் வைத்து, மிகவும் அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தி, சம்பியன் பட்டம் வென்றார். தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சனையே, அவர் வீழ்த்தினார்.

ஆர்தர் ஆஷே விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டி, உலகின் முதல்நிலை வீரருக்கும் இந்தத் தொடருக்காக 28ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்ட வீரருக்கும் இடையிலான போட்டியாகவே அமைந்த நிலையில், நடால் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிரடியாக, நடால் விளையாடினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், முதலாவது செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும், அதே புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய அவர், 3ஆவது செட்டை, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, நேர் செட்களில், போட்டியை வெற்றிகொண்டார்.

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நேர் செட்களில் வெற்றி பதிவுசெய்யப்பட்டது.

நடாலின் இந்த வெற்றி, அவரது 3ஆவது ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ் பட்டமென்பதோடு, அவரது 16ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டமாகும்.

இதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிரான்ட் ஸ்லாம்களை வென்ற ரொஜர் பெடரருடன் காணப்படும் இடைவெளியை, 3ஆக, நடால் குறைத்துக் கொண்டார். நடாலுக்கு, இப்போது 31 வயதே ஆகின்ற நிலையில், பெடரரை வீழ்த்தும் வாய்ப்பு, அவருக்குக் காணப்படுவதாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, “இவ்விடயங்கள் பற்றி, நான் அதிகமாகச் சிந்திப்பதில்லை. எனது பாணியில் நான் செயற்படுகிறேன், அவரது பாணியில் அவர் செயற்படுகிறார். விளையாட்டுப் பற்றிய உணர்வும் ஆர்வமும், இன்னமும் என்னிடத்தில் காணப்படுகிறது.

“இப்பருவகாலத்தில், அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்திய ரொஜருக்கு வாழ்த்துகள். நானும் அற்புதமான பருவகாலத்தைக் கொண்டிருப்பதால், எனக்கும் வாழ்த்துகள். என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்” என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .