2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நான்காமிடத்துக்கு முன்னேறியது ஆர்சனல்

Editorial   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் நான்காமிடத்துக்கு ஆர்சனல் முன்னேறியுள்ளது.

வட்ஃபேர்ட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் நான்காமிடத்துக்கு ஆர்சனல் முன்னேறியுள்ளது.

இப்போட்டியின் 10ஆவது நிமிடத்தில் பின்புறமாக வந்த பந்தைப் பிடிப்பதற்கு வட்ஃபேர்ட்டின் கோல் காப்பாளர் பென் ஃபொஸ்டர் நீண்ட நேரம் எடுத்துக் கொண்ட நிலையில், அதைப் பயன்படுத்தி ஆர்சனலின் முன்களவீரர் பியரி-எம்ரிக் அபுமெயாங்க் முன்னேறிச் சென்று பந்தைக் கைப்பற்றிக் கோலாக்கிப் பெற்ற கோலுடனே இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது.

குறித்த கோல் பெறப்பட்ட அடுத்த நிமிடத்தில், ஆர்சனலின் மத்தியகளவீரர் லூகாஸ் டொரெய்ராவின் முகத்தில் தனது கையால் தாக்கிய வட்ஃபேர்ட்டின் முன்களவீரரும் அணித்தலைவருமான ட்ரோய் டீனி சிவப்பு அட்டைக் காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த போட்டி முழுவதையும் 10 வீரர்களுடனேயே வட்ஃபேர்ட் விளையாடியிருந்தது.

அந்தவகையில், 10 பேருடனேயே குறித்த சம்பவத்தின் பின்னர் விளையாடியிருந்தபோதும் வட்ஃபேர்ட்டின் பின்களவீரர் அடம் மசினாவின் கோல் கம்பத்தை நோக்கியதான நீண்ட தூரத்திலான உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்ததுடன், ஆர்சனலின் கோல் காப்பாளர் பேர்ணார்ட் லெனோ குறிப்பிட்ட எண்ணிக்கையான அபாரமான தடுப்புகளையும் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, ஆர்ச்னலின் மத்தியகளவீரர் ஹென்றிக் மிகித்திரயானின் கோல் கம்பத்துக்கு அருகிலிருந்தான உதையை பென் ஃபொஸ்டர் அபாரமாகத் தடுத்திருந்தார்.

அந்தவகையில், குறித்த வெற்றியின் பின்னர் 66 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆர்சனல், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது. செல்சியும் 66 புள்ளிகளுடன் உள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் ஐந்தாமிடத்தில் காணப்படுவதுடன், ஆர்சனலை விட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது. 67 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் காணப்படுவதுடன், 64 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .