2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாப்போலியால் வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன்கள்

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான லேஸியோ வெளியேற்றப்பட்டுள்ளது.

நாப்போலியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியில் தோற்றதன் மூலமே தொடரிலிருந்து லேஸியோ வெளியேற்றப்பட்டுள்ளது.

இப்போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே தனி முயற்சியால் கோலைப் பெற்ற நாப்போலியின் முன்களவீரர் லொரென்ஸோ இன்சீனியா, தனதணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், லேஸியோவின் முன்களவீரர் பிலிப் கைசெடோவின் மீது நாப்போலியின் பின்களவீரர் எல்செய்ட் ஹைசஜ் வீழ்ந்த நிலையில், போட்டியின் 10ஆவது நிமிடத்தில் லேஸியோவுக்கு பெனால்டி கிடைத்தபோதும், அதை லேஸியோவின் முன்களவீரர் சிரோ இம்மொபைல் கோல் கம்பத்துக்கு வெளியே பந்தைச் செலுத்தினார்.

இதேவேளை, மேற்குறித்த பெனால்டிக்காக ஏற்கெனவே மஞ்சள் அட்டை காட்டப் பெற்றிருந்த எல்செய்ட் ஹைசஜ், சிரோ இம்மொபைலுடன் போட்டியின் 19ஆவது நிமிடத்தில் மோதிய நிலையில் இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பெற்று, சிவப்பு அட்டை பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அடுத்த ஆறாவது நிமிடத்தில் விதிமுறை மீறலுக்காக மஞ்சள் அட்டை காட்டப்பெற்றிருந்த லேஸியோவின் மத்தியகளவீரர் லூகாஸ் லெய்வா, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

பின்னர் இரண்டாவது பாதியில் ஓஃப் சைட் என சிரோ இம்மொபைல் பெற்ற கோலொன்று நிராகரிக்கப்பட்டிருந்ததுடன், 85ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்தை நோக்கிய அவரின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இதேவேளை, லேஸியோவின் மத்தியகளவீரர் மனுவல் லஸாரின் கோல் கம்பத்தை நோக்கிய உதையும் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்ததுடன், மீண்டு வந்த பந்தை லேஸியோவின் பின்களவீரர் பிரான்ஸெஸ்கோ அக்கர்பு கோலாக்கியபோதும் போட்டி முடிவடைய இரண்டு நிமிடமிருக்கையில் அது ஓஃப் சைட் என நிராகரிக்கப்பட்ட நிலையில் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற நாப்போலி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .