2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாப்போலியிடம் தோற்றது ஜுவென்டஸ்

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், நாப்போலியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் தோற்றது.

இப்போட்டியின் 53ஆவது நிமிடத்தில், சக முன்களவீரர் கொன்ஸலோ ஹியூகைன் வழங்கிய பந்தை கோல் கம்பத்தை நோக்கி ஜுவென்டஸின் இன்னொரு முன்களவீரரான போலோ டிபாலா செலுத்தியபோதும், அது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்தது. திரும்பி வந்த பந்தை ஜுவென்டஸின் இன்னொரு முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கியபோதும், அப்போது கொன்ஸலோ ஹியூகைன் ஓஃப் சைட்டில் இருந்தார் என அக்கோல் நிராகரிக்கப்பட்டது.

பின்னர் அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோவிடமிருந்து பந்தைப் பெற்ற கொன்ஸலோ ஹியூகைனின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை நாப்போலியின் கோல் காப்பாளர் அலெக்ஸ் மெரட் தடுத்திருந்தார்.

இந்நிலையில், அடுத்த நிமிடத்தில் நாப்போலியின் முன்களவீரர் லொரென்ஸோ இன்சீனியாவின் உதையை ஜுவென்டஸின் கோல் காப்பாளர் வொஜ்ஜெவ் ஸ்டான்ஸ்கி தடுத்து அது நாப்போலியின் மத்தியகளவீரர் பியோத்தர் ஸிலென்ஸ்கியிடம் செல்ல, அவர் அதைக் கோலாக்க நாப்போலி முன்னிலை பெற்றது.

இதேவேளை, 86ஆவது நிமிடத்தில் சக முன்களவீரர் ஜொஸே கல்லகோனிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய லொரென்ஸோ இன்சீனியா தமது முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இந்நிலையில், 90ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய சக முன்களவீரர் றொட்றிகோ பென்டாக்கூரிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, நாப்போலியின் முன்னிலையை ஒன்றாகக் குறைத்தார்.

தொடர்ந்த மேலதிக நிமிடங்களில், தலைக்கு மேலால் கொன்ஸலோ ஹியூகைன் செலுத்திய உதையை அலெக்ஸ் மெரட் தடுத்திருந்த நிலையில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் தோல்வியடைந்திருந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற கைதரியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இன்டர் மிலன் முடித்துக் கொண்டது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லொட்டரோ மார்ட்டின்ஸ் பெற்றிருந்தநிலையில், கைதரி சார்பாகப் பெறப்பட்ட கோலை றட்ஜா நைன்கொலன் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் றோமா சமப்படுத்தியிருந்தது. றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை எடின் டெக்கோ பெற்றதோடு, லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை பிரான்ஸெஸ்கோ அக்கர்பி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .