2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நியூசிலாந்து எதிர் இந்தியா: ODI தொடர் நாளை ஆரம்பிக்கின்றது

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடர், நேப்பியரில் இலங்கை நேரப்படி நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

இத்தொடருக்கு முன்பதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், இரண்டாமிடத்தில் இந்தியாவும் மூன்றாமிடத்தில் நியூசிலாந்தும் காணப்படுகின்ற நிலையில், இத்தொடரில் 5-0 என இந்தியாவை வெள்ளையடித்தால் இரண்டாமிடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பு நியூசிலாந்துக்கு காணப்படுகிறது. மாறாக, 5-0 என இந்தியாவால் வெள்ளையடிக்கப்பட்டால் நான்காமிடத்துக்கு நியூசிலாந்து கீழிறங்கும். தொடரின் வேறெந்த முடிவுகளும் தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தாதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பலமாக, அணித்தலைவர் விராத் கோலி, ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் ரோகித் ஷர்மா, ஷீகர் தவான் ஆகியோர் காணப்படுகையில் நியூசிலாந்தின் பலமாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன், றொஸ் டெய்லர், டொம் லேதம் ஆகியோர் காணப்படுகின்றனர். ஆக, எந்த அணியின் மூவர் மற்றைய மூவரை விட பிரகாசிக்கின்றனரோ அவ்வணிக்கே தொடரைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மகேந்திர சிங் டோணியின் பெறுபேறுகள் அவரின் இடத்தை, தினேஷ் கார்த்திக், றிஷப் பண்ட் ஆகியோருக்கு மத்தியிலும் நியாயப்படுத்தியிருந்த நிலையில், இத்தொடரிலும் அப்பெறுபேற்றை அவர் தொடர்ந்தால் அழுத்தமில்லாமல் உலகக் கிண்ணத்துக்குள் நுழையலாம்.

மறுபக்கமாக, அவுஸ்திரேலியாவை விட ட்ரெண்ட் போல்ட், லொக்கி பெர்கியூசன், டிம் செளதி, மற் ஹென்றி ஆகியோரை உள்ளடக்கிய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சுக் குழாம் இந்தியாவுக்கு மேலதிக சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணியின் சிக்கலாக, அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் கொலின் மன்றோவின் பெறுபேறுகள் திருப்தியளிப்பதாக காணப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .