2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்துமா இங்கிலாந்து?

Editorial   / 2019 நவம்பர் 20 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது, மெளன்ட் மகட்டரேயில், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குள் இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடர் உள்ளடங்காத நிலையில் அழுத்தம் குறைந்ததாகக் காணப்படுகின்றபோதும், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் காணப்படுகிறது.

தரவரிசையில் தற்போது மூன்றாமிடத்திலிருக்கும் இங்கிலாந்து, இத்தொடரை வெல்லும் பட்சத்தில், இரண்டாமிடத்திலுள்ள நியூசிலாந்தை மூன்றாமிடத்துக்கு பின்தள்ளி இரண்டாமிடத்துக்கு முன்னேற முடியும். மாறாக, இத்தொடரை 0-2 என நியூசிலாந்திடம் இங்கிலாந்து இழந்தால் நான்காமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தைப் பொறுத்தவரையில் அணித்தலைவர் கேன் வில்லியம்சனின் தலைமையில், றொஸ் டெய்லர், டொம் லேதம், பி.ஜெ வட்லிங், ஹென்றி நிக்கொல்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத் தூண்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் உறுதியான பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்குவார்கள் என்று நியூசிலாந்து எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சுப் பக்கம் பார்க்கும்போது, முதலாவது டெஸ்டுக்கான ஆடுகளமானது ஆரம்ப நாளின் மதிய நேர இடைவேளையைத் தொடர்ந்து தட்டையானதாகவே இருக்கும் எனக் கருதப்படுகையில், கட்டுக்கோப்பாக பந்துவீசக்கூடிய மிற்செல் சான்டெனரை ஏழாமிடத்தில் கொண்டு, ட்ரெண்ட் போல்ட், டிம் செளத்தியுடன் அச்சுறுத்தலாக பந்துவீசக்கூடிய நீல் வக்னருடன், அவரைப் போன்ற வலதுகை பந்துவீச்சாளரான லொக்கி பெர்கியூசனுக்கு அறிமுகத்தை நியூசிலாந்து வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் அவர்களின் பிரதான ஆயுதமாக ஜொவ்ரா ஆர்ச்சரே இருப்பார் என்ற நிலையில், அவருடன் ஸ்டூவர்ட் ப்ரோட்டும், கட்டுக்கோப்பை வழங்கக்கூடிய ஜேக் லீச்சும் விளையாடுவது உறுதியாகவுள்ள நிலையில், அடுத்த பந்துவீச்சாளராக பயிற்சிப் போட்டிகளின்படி சாம் கர்ரனே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், அனுபவமிக்க கிறிஸ் வோக்ஸை விட சாம் கர்ரன் சிறந்தவரா என கேள்விகள் எழாமலில்லை.

இந்நிலையில், துடுப்பாட்டப் பக்கம் றோறி பேர்ண்ஸுடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்டவீரராக டொம் சிப்லி களமிறங்கி சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளார். தவிர, தனது பழைய நான்காமிடத்துக்கே இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ றூட் செல்கின்ற நிலையில் மூன்றாமிடத்தில் ஜோ டென்லி களமிறங்கவுள்ளதுடன், ஆறாமிடத்தில் ஒலி போப் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X