2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்துமா பங்களாதேஷ்?

Editorial   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், நேப்பியரில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்த வரை அண்மைய ஆண்டுகளில் பங்களாதேஷ் எழுச்சி பெற்றிருந்தாலும் நியூசிலாந்தில் வைத்து நியூசிலாந்தை வீழ்த்துவதற்கு மிகுந்த கூட்டிணைவான அணிப் பெறுபேறொன்று பங்களாதேஷிடம் வெளிப்பட வேண்டும்.

காயம் காரணமாக ஷகிப் அல் ஹசனை இழந்தமை பங்களாதேஷுக்கு நிச்சயமாக இழப்பே ஆகும். ஆகவே, சிரேஷ்ட வீரர்களான தமிம் இக்பால், முஷ்பிக்கூர் ரஹீம், மகமதுல்லா ஆகியோரே பங்களாதேஷின் துடுப்பாட்ட தூண்களாக விளங்கப் போகின்றார்கள். தட்டையான ஆடுகளங்களே இத்தொடரில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இவர்களோடு அண்மைய காலங்களில் பிரகாசித்த லிட்டன் தாஸ், மொஹமட் மிதுன் ஆகியோரின் பெறுபேறுகளே பங்களாதேஷின் வெற்றிவாய்ப்புகளை உருவாக்கும்.

இதுதவிர, இவ்வாண்டே உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில், செளமியா சர்க்கார், சபீர் ரஹ்மான் போன்ற பங்களாதேஷ் குழாமில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தமதிடங்களை உலகக் கிண்ணக் குழாமில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இத்தொடர் கருதப்படுகிறது.

மறுபக்கமாக, அணித்தலைவர் மஷ்ரபி மோர்தஸா, முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோருக்கு அடுத்ததாக உலகக் கிண்ணக் குழாமில் தமதிடங்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான வாய்ப்பாக ருபெல் ஹொஸைன், ஷபிகுல் இஸ்லாம் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இத்தொடர் காணப்படுகிறது.

இதேவேளை, உலகக் கிண்ணத்துக்கு இன்னும் அதிக காலம் இல்லாத நிலையில், தாம் புதிதாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறக்கியுள்ள ஹென்றி நிக்கொல்ஸை அந்நிலையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக இது காணப்படுகிறது.

இதுதவிர, அண்மைக்காலமாக நியூசிலாந்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் நிலையாக இடம்பெற்றிருக்காத சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதி, தனதிடத்தை அணியில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் இத்தொடர் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X