2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிரூபித்தார் அஷ்வின்; கொண்டாடினார் கோலி

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் முதல் நாள் முடிவில், அவ்வணியின் சுழற்பந்து வீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின், தன்னை நிரூபித்துக் காட்டினார்.

பேர்மிங்காமிலுள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் (01) ஆரம்பித்த இப்போட்டியில், மேகங்கள் சூழ்ந்த வானிலை, ஓரளவுக்கு வரண்ட ஆடுகளம் ஆகியவற்றுக்கு மத்தியில், முதலில் துடுப்பெடுத்தாடும் முடிவை, இங்கிலாந்து எடுத்திருந்தது.

இரு அணிகளும் ஒரேயொரு சுழற்பந்து வீச்சாளருடன் மாத்திரம் களமிறங்கிய போதிலும், 7ஆவது ஓவரிலேயே, சுழற்பந்து வீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச அழைக்கப்பட்டமை, இரு அணிகளுமே தவறைச் செய்துவிட்டனவோ என்ற கேள்வியை எழுப்பியது. அக்கேள்வியை மேலும் வலுவடையச் செய்வது போல, அற்புதமான பந்தொன்றை வீசிய அஷ்வின், 9ஆவது ஓவரிலேயே, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலிஸ்டயர் குக்கை வீழ்த்தியிருந்தார்.

இந்திய உபகண்ட ஆடுகளங்களுக்கு வெளியே, பந்துவீச்சில் இதுவரை பெரிதாகப் பிரகாசித்திருக்காத அஷ்வினுக்குப் பதிலாக, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அண்மைக்காலத்தில் கலக்கும் குல்தீப் யாதவை, அணியில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் சில எழுந்திருந்த நிலையில், அவற்றுக்குப் பதிலளிப்பது போல, அஷ்வினின் பந்துவீச்சு அமைந்திருந்தது.

ஆனால், அஷ்வினின் பந்துவீச்சுக்கு நடுவே சுதாகரித்து, ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களுடன் பலமாகக் காணப்பட்ட இங்கிலாந்து அணி, 4ஆவது விக்கெட்டாக, அணித் தலைவர் ஜோ றூட்டை, ரண் அவுட் முறையில் இழந்தது. அதன் பின்னர் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்ட, முதல் நாள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்கள் என்ற நிலையில் காணப்பட்டது.

நேற்றைய தினம் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, எஞ்சியிருந்த ஒரு விக்கெட்டையும் விரைவாக இழந்து, 287 மாத்திரமே பெற்றது.

பின்னர் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நேற்றைய மதியபோசன இடைவேளை வரை, 3 விக்கெட்டுகளை இழந்து, 76 ஓட்டங்களுடன் காணப்பட்டது.

ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் 3 விக்கெட்டுகளை, குறுகிய இடைவெளியில் இழந்திருந்தது.

ஸ்கோர் விவரம்

இங்கிலாந்து: 287/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 80, ஜொனி பெயர்ஸ்டோ 70, கீட்டன் ஜெனிங்ஸ் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 4/60, மொஹமட் ஷமி 3/64)

இந்தியா: (நேற்றைய மதியபோசன இடைவேளை வரை) 3/76 (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 26, முரளி விஜய் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் குரான் 3/23)

விறுவிறுப்பாக இடம்பெற்ற முதல்நாளில், இன்னொரு விடயமும் சூட்டைக் கிளப்பியிருந்தது. இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ றூட்டை, ரண் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்த எறியை, இந்திய அணித் தலைவர் விராத் கோலியே எறிந்திருந்தார். அதன் பின்னர், காற்றில் முத்தங்களை விடுவது போலச் சைகை செய்த கோலி, அதன் பின்னர், றூட்டை நக்கல் செய்வது போன்று சைகை ஒன்றைச் செய்திருந்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவது போட்டியில், தொடரை வென்றுகொடுத்த சதத்தைப் பெற்ற ஜோ றூட், தனது துடுப்பைக் கீழே போடுவதாக, தனது கொண்டாட்டத்தை நிகழ்த்தியிருந்தார். “mic drop” என்று சொல்லப்படும் அது, நிகழ்வொன்றின் இறுதியில், பாடகர்களாலும் கலைஞர்களாலும் மேற்கொள்ளப்படும் ஒரு வகையாகும்.

அதேபோன்ற வகையிலேயே, விராத் கோலி, தனது கொண்டாட்டத்தை நிகழ்த்தியிருந்தார். இது, இங்கிலாந்தின் சில இரசிகர்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்திருந்தாலும், அவரின் கொண்டாட்டத்தை, இங்கிலாந்து அணி தவறாக எடுக்கவில்லை என, கீட்டன் ஜெனிங்ஸ், பின்னர் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .