2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நேரம் வரும்போது ஓய்வு பெறுவேன்’

Editorial   / 2018 ஜூலை 30 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேரம் வரும்போது ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான லசித் மலிங்க தெரிவித்துள்ளார். இறுதியாக, கடந்தாண்டு இலங்கையணிக்காக லசித் மலிங்க விளையாடிய நிலையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் லசித் மலிங்க தேர்வுசெய்யப்படாமையைத் தொடந்து விரைவில் லசித் மலிங்க ஓய்வை அறிவிக்கப் போகின்றார் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே லசித் மலிங்கவின் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

காயம் காரணமாக நீண்ட காலமாக விளையாடாமல் இருந்த லசித் மலிங்க, கடந்தாண்டு இலங்கையணிக்கு திரும்பியிருந்த நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கையணி சார்பாக லசித் மலிங்கவே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஆறு போட்டிகளில் விளையாடி, 16.5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற வகையில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். இது தவிர, கனடாவில் அண்மையில் நடைபெற்ற பூகோள இருபதுக்கு – 20 தொடரில் மொன்ட்றியல் டைகர்ஸ் அணிக்காக விளையாடிய லசித் மலிங்க 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

அந்தவகையில், இலங்கையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் லசித் மலிங்க தெரிவுசெய்யப்படாதது ஆச்சரியமளித்தாலும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான இலங்கையணில் லசித் மலிங்க தெரிவுசெய்யப்படாதது ஆச்சரியமளிப்பதாயில்லை. ஏனெனில், கடந்தாண்டு இலங்கையணிக்குத் திரும்பிய பின்னர் 62.3 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற வீதத்திலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் லசித் மலிங்க விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் தேர்வாளர்களுடன் நடந்த கலந்துரையாடலொன்றில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுபவர்கள் மாத்திரமே இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித் தெரிவில் கருத்திற் கொள்ளப்படுவார்கள் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், வாய்ப்பொன்றை வழங்காது தனது பெறுபேற்றை எவ்வாறு மதிப்பிடுவார்கள் எனக் கேள்வியெழுப்பிய லசித் மலிங்க, கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர் 50 ஓவர் போட்டியொன்றில் விளையாடவில்லை எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஆடுகள பராமரிப்பாளர்களை தான் கடந்தாண்டு விமர்சித்தது தான் அணியில் தேர்வு செய்யப்படாததில் தாக்கம் செலுத்துவதென நம்புவதாக லசித் மலிங்க கூறியுள்ளார். இந்தியாவுடன் அனைத்து வகையான போட்டிகளிலும் இலங்கை கடந்தாண்டு தோற்றதன் பின்னர் விளையாட்டமைச்சால் நடாத்தப்பட்ட அமர்வில், கிரிக்கெட் அதிகாரிகளை விமர்சித்திருந்த லசித் மலிங்க, இலங்கையணியின் விருப்பத்துக்கு மாறாக ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டதை குறிப்பாக விமர்சித்திருந்தார்.

இதுதவிர, தனது வெளிப்படையான நேரடியாகப் பேசும் தன்மையையும் தான் அணியில் தேர்வு செய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமெனவும் லசித் மலிங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X