2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்களாதேஷை வெள்ளையடித்தது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-0 என பங்களாதேஷை மேற்கிந்தியத் தீவுகள் வெள்ளையடித்துள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வெற்றிபெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், கிங்ஸ்டனில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்டிலும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என இத்தொடரில் பங்களாதேஷை மேற்கிந்தியத் தீவுகள் வெள்ளையடித்தது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கிரேய்க் பிறத்வெய்ட் 110, ஷிம்ரோன் ஹெட்மயர் 86, ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மெஹடி ஹஸன் மிராஸ் 5, அபு ஜயெட் 3, தஜிகுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 47, ஷகிப் அல் ஹஸன் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் 5, ஷனொன் கப்ரியல், அறிமுக டெஸ்ட் வீரர் கீமோ போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், றொஸ்டன் சேஸ் 32 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ஷகிப் அல் ஹஸன் 6, மெஹடி ஹஸன் மிராஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 335 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், சகல விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களையே பெற்று 166 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஷகிப் அல் ஹஸன் 54, லிட்டன் தாஸ் 33, முஷ்பிக்கூர் ரஹீம் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 6, றொஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்,

இப்போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் ஜேஸன் ஹோல்டர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .