2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பதவி விலகினார் மத்தியூஸ்

Editorial   / 2017 ஜூலை 11 , பி.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 3 வகையான போட்டிகளின் தலைமைத்துவத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.சிம்பாப்வே அணிக்கெதிரான, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தோல்வியடைந்த பின்னரே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொடரை, 3-2 என்ற கணக்கில் இலங்கை அணி இழந்திருந்தது.

இந்தத் தொடரின் 4ஆவது போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றிபெற்ற பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மத்தியூஸ், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தில், அணித்தலைவராக தான் இருப்பாரா என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.

தற்போது, தொடரையே இலங்கை அணி இழந்துள்ள நிலையில், பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

பதவியிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை, நேற்றுக் காலை, தேர்வாளர்களிடம் மத்தியூஸ் வழங்கினாரெனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நேற்று இரவே, இது தொடர்பான செய்தி வெளியானது.

சிம்பாப்வே தொடரின் 5ஆவது போட்டியில் தோல்வியடைந்து, தொடரை இழந்தமையை, “எனது கிரிக்கெட் வாழ்வின் மிகவும் மோசமான தருணங்களில் ஒன்று” என வர்ணித்திருந்த அவர், இதை ஏற்றுக் கொள்ள முடியாமலிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் பயிற்றுநராகக் கடமையாற்றிய கிரஹாம் ஃபோர்ட், தனது பதவியிலிருந்து, சம்பியன்ஸ் கிண்ணத்தின் முடிவில் விலகியிருந்த நிலையில், தற்போது மத்தியூஸ், அதற்கு அடுத்த தொடரின் பின்னர் விலகியுள்ளார்.

மத்தியூஸ், 34 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய நிலையில், அவற்றில் 13 போட்டிகளில் இலங்கை அணி வென்றதோடு, 15இல் தோல்வியடைந்திருந்தது. 6 போட்டிகள், வெற்றி - தோல்வியின்றி நிறைவுபெற்றன. 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் தலைமை தாங்கிய போது, 47 போட்டிகளில் வெற்றி கிடைத்ததோடு, 46 போட்டிகளில் தோல்விகள் கிடைத்திருந்தன. 12 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அவர் தலைமை தாங்கிய போது, 4 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் கிடைத்திருந்தது.

அணித்தலைமையிலிருந்து மத்தியூஸ் விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக யாரை அணித்தலைவராகத் தெரிவுசெய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும், உபுல் தரங்கவுக்கு, அந்த வாய்ப்பு ஏற்படக்கூடும்.

ஆனால் அவர், டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தைக் கொண்டவர் கிடையாது என்பதால், டெஸ்ட் தலைமைத்துவத்துக்கு யார் நியமிக்கப்படக்கூடும் என்பது, தெளிவற்ற ஒன்றாகவே உள்ளது. டினேஷ் சந்திமாலுக்கு, இந்த வாய்ப்புக் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது, குறுகிய காலத்துக்கு, ரங்கன ஹேரத் நியமிக்கப்படும் வாய்ப்பும் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .