2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பதில் தலைவருக்கு பதில், பதில் தலைவர்?

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் பதில் தலைவர் சாமர கப்புகெதர, நாளை இடம்பெறவுள்ள 4ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்படலாம் என அறிவிக்கப்படுகிறது. அவருக்குக் காணப்பட்ட முதுகு உபாதை, மேலும் தீவிரமடைந்துள்ளதை அடுத்தே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவரான உபுல் தரங்க, இலங்கை அணி, குறித்த நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்காமையின் காரணமாக, 2 போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டார்.
அவ்விரண்டு போட்டிகளுக்குமான தலைவராக, கப்புகெதர அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அடுத்த போட்டியில் கப்புகெதரவால் பங்குபற்ற முடியாது போனால், இன்னுமொரு தலைவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

3ஆவது போட்டிக்கு முன்னதாகவே - அதாவது, அணித்தலைவராக அவரது முதலாவது போட்டிக்கு முன்னரே - அவர், முதுகு உபாதை பற்றி முறையிட்டதாகவும், எனினும் அவர் அப்போட்டியில் பங்குபற்றியதாகவும் அறிவிக்கப்படுகிறது.

4ஆவது போட்டியில் அவர் பங்குபற்ற மாட்டார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க, கப்புகெதரவுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, 3ஆவது போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கப்புகெதர, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தமைக்காக, அணியிடம் மன்னிப்புக் கோரியதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றால், முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவது என, அணி நிர்வாகத்தால், முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த முடிவுக்கு மாறான முடிவையே, கப்புகெதர எடுத்தார் என்று கூறப்படுகிறது.

இந்தத் தொடரில், 3 டெஸ்ட் போட்டிகளிலும் முதலிரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், விராத் கோலியே, நாணயச் சுழற்சியில் வென்றிருந்தார். எனவே, இலங்கை அணிக்குச் சாதகமாக நாணயச் சுழற்சியின் முடிவு வந்த போது கூட, அதைப் பயன்படுத்த முடியாத நிலை, இலங்கைக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .