2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பந்தைச் சேதப்படுத்தியதாக சந்திமால் மீது குற்றச்சாட்டு

Editorial   / 2018 ஜூன் 17 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையே சென். லூசியாவில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், பந்தின் தன்மையில் மாற்றம் செய்ததாக இலங்கையணியின் தலைவர் தினேஷ் சந்திமால் சர்வதேச கிரிக்கெட் சபையால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான குறித்த டெஸ்டில், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கும் அதைத் தொடர்ந்து பந்து மாற்றப்பட்டதற்கும் எதிரணிக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட்டமெதுக்கெதிராக எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, குறித்த டெஸ்டின் மூன்றாம் நாளான நேற்று ஆரம்பத்தில் களமிறங்க இலங்கை வீரர்கள் மறுத்திருந்தனர்.

பந்து மாற்றப்படுவது குறித்து நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே இலங்கையணிக்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன், காணொளி ஆதாரங்களும் வழங்கப்படாத நிலையிலேயே மேற்கூறப்பட்ட காரணங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, 9.30மணிக்கு களமிறங்க வேண்டிய இலங்கை 10.50க்கே களமிறங்கி ஆட்டம் ஆரம்பமாகவிருந்தது.

விதிமுறைகளின்படி அப்போது களத்திலிருந்த துடுப்பாட்ட வீரர்கள் டெவோன் ஸ்மித், கெரான் பவலால் பந்து தெரிவுசெய்யப்பட்டு ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தநிலையில், தினேஷ் சந்திமால் நடுவர் அலீம் தாருடன் கதைத்து, பின்னர் அக்கலந்துரையாடலில் மற்றைய நடுவர் இயன் கோல்டும் இணைந்துக் கொண்டனர்.

இதன் பின்னர் இலங்கை வீரர்கள் மைதான எல்லையோரமாக மைதானத்துக்குள் நின்று கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில், தினேஷ் சந்திமால் யாருடனே அலைபேசியில் உரையாடியபோது இலங்கையணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க, அசங்க குருசிங்க ஆகியோருடன் முன்னர் கலந்துரையாடியிருந்த போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஶ்ரீநாத் அவ்வாறு அலைபேசியில் உரையாட முடியாது என அறிவுறுத்தியிருந்தார். இதற்கு முன்னர் அசங்க குருசிங்க நீண்ட நேரமாக யாருடனோ அலைபேசியில் உரையாடிய வண்ணம் இருந்தார்.

அந்தவகையில், இறுதியாக 11.20 போல அன்றைய நாள் ஆட்டம் ஆரம்பித்திருந்தபோதும் எதிர்ப்பிலேயே வீரர்கள் போட்டியைத் தொடர்ந்ததாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த டெஸ்டின் இரண்டாம் நாளான கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டத்தின் காணொளியை மீளாய்வு செய்த பின்னரே நடுவர்கள் குற்றச்சாட்டை சுமத்தியதாகவும் பந்தின் தன்மையை மாற்றுவதற்காக பந்தின் மீது பயன்படுத்தப்பட்ட பதார்தத்தை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த சம்பவமானது, அவுஸ்திரேலியாவுக்கெதிரான 2016-17ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரின்போது தென்னாபிரிக்க அணியின் தலைவரான பப் டு பிளெஸி சுவிங்கம் மூலம் பந்தின் தன்மையை மாற்ற முனைந்த சம்பவம் போலனதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரில், பந்தைச் சேதப்படுத்தியதாக கமரோன் பான்குரோப்ட், ஸ்டீவ் ஸ்மித் ஏற்றுக்கொண்டபோதும் தென்னாபிரிக்காவுக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கமாக, பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இன்ஸமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி களமிறங்க மறுத்ததைத் தொடர்ந்து எதிரணிக்கு வெற்றி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஏறத்தாழ ஒன்றரை மணித்தியாலமாக நேற்று இலங்கை மைதானத்துக்குள் களமிறங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, போட்டி தொடரும்போது களமிறங்குமாறு அறிவுறுத்தியதாகவும் அணியின் அங்கத்தவருக்கெதிராக தேவையில்லாத குற்றச்சட்டுக்கள் முன்வைக்கப்படுமிடத்து எந்த வீரரரையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை கிரிக்கெட் சபை எடுக்கும் என அவ்வறிக்கையில் கூறியுள்ளது.

இதேவேளை, தனஞ்சய டி சில்வா பந்தை மினுமினுப்பாக்கும் காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட விதத்திலேயே பந்தை வீரர்கள் மினுமினுப்பாக்குவதாகவும் அவர்கள் வேறு பொருட்கள் எதையும் பயன்படுத்தவில்லை என இலங்கையணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .