2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பயிற்சியாளர் பதவிக்கு விளம்பரப்படுத்தவுள்ள இந்தியா?

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ணம் நெருங்கி வருகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி ஷாஸ்திரி உட்பட இந்திய அணியின் ஏனைய பயிற்றுவிப்பாளர்களுக்கு நீடிப்பொன்று வழங்கப்படுமா என்ற கேள்வி முக்கியமாகியுள்ளது.

ஏனெனில், 2017ஆம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்ட ரவி ஷாஸ்திரியினதும் ஏனைய பயிற்சியாளர்களினதும் ஒப்பந்தங்கள், உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு, விரைவாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விளம்பரப்படுத்தும் எனத் தெரிகிறது.

உலகக் கிண்ணமானது இவ்வாண்டு ஜூலை 14ஆம் திகதி முடிவடைவதுடன், மேற்கிந்தியத் தீவுகளுக்கான இந்திய அணியின் சுற்றுப்பயணமானது, இவ்வாண்டு ஜூலை மாத இறுதியில் ஆரம்பிக்கின்றநிலையில், இடைப்பட்ட இரண்டு வார காலத்தில் நேர்காணல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விண்ணப்பித்தவர்களின் மதிப்பீட்டிலிருந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு தற்காலிக பயிற்சியாளர் குழாமொன்றை நியமிப்பதோ அல்லது ரவி ஷாஸ்திரி, உதவிப் பயிற்றுவிப்பாளர் சஞ்சய் பங்கர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண், களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஶ்ரீதரை உள்ளடக்கிய அவரது அணிக்கு நீடிப்பொன்றை வழங்குவதா என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது.

இதுதவிர, விண்ணப்பித்தவர்களிடமிருந்து குறும்பட்டியலைப் பெற, நேர்காணல்களைப் பெற, இறுதித் தெரிவை மேற்கொள்ள, இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர்கள் சச்சின் தென்டுல்கர், செளரவ் கங்குலி, முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஸ்மன் ஆகியோரை உள்ளடக்கிய கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீண்டும் அணுகும் என அறியப்படுகிறது.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு மேற்கொண்ட அதே நடைமுறையை எடுத்துக் கொள்வோமானால், ரவி ஷாஸ்திரி நேரடியாக குறும்பட்டியலுக்குள் இடம்பெறுவார். அப்போது, முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேயின் ஓராண்டுப் பதவிக்காலம் முடிந்ததும் அவர் நேரடியாக இறுதிக் குறும்பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

அப்போது கும்ப்ளேயின் பாணி குறித்து, இந்திய அணியின் தலைவர் விராத் கோலி கருத்துக்களை கொண்டிருப்பதுடன், அவர் தலைமைப் பயிற்றுவிப்பாளராகத் தொடருவரை விரும்பவில்லை இந்திய கிரிக்கெட் சபையால் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தனது தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து கும்ப்ளே இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையிலேயே, இந்திய அணியின் இன்னொரு முன்னாள் வீரர் வீரேந்தர் ஷெவாக் உள்ளடங்கலான ஐந்து பேர் கொண்ட குறும்பட்டியலிருந்து ரவி ஷாஸ்திரி தெரிவாகியிருந்தார்.

ரவி ஷாஸ்திரியின் பயிற்றுவிப்பின் கீழ், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியிருந்த இந்தியா, அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரையும் வென்றிருந்தது. அந்தவகையில், துடுப்பாட்டவீரரொருவராகவும் அணித்தலைவரொருவராகவும் தனது வளர்ச்சிக்கு, ரவி ஷாஸ்திரி குறிப்பிடத்தக்களவு பங்காற்றியதாக கோலி தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .