2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மனை வென்றது லிவர்பூல்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் ஆரம்ப குழுநிலைப் போட்டிகளில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன், ஸ்பானிய லா லிகா கழகங்களான அத்லெட்டிகோ மட்ரிட், பார்சிலோனா, ஜேர்மனிய புண்டெலஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் ஆகிய கழகங்கள் வெற்றிபெற்றுள்ளன.

தமது மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான குழு சி போட்டியில், இறுதி நிமிடங்களில் றொபேர்ட்டோ பெர்மினோ பெற்ற கோலோடு 3-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. பெர்மினோ தவிர, லிவர்பூல் சார்பாக, டேனியல் ஸ்டரிட்ஜ், ஜேம்ஸ் மில்னர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக தோமஸ் மெயுனியர், கிலியன மப்பே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற குழு பி போட்டியில், அணித்தலைவர் மெளரோ இகார்டி, மத்தியாஸ் வெசினோ பெற்ற கோல்களால் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை இன்டர் மிலன் வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியன் எரிக்ஸன் பெற்றிருந்தார்.

இந்நிலையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, டியகோ கொஸ்டா, ஜொஸே கிமென்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மொனாக்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சாமுவேல் கிரன்ட்சிர் பெற்றார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வி ஐந்தோவனுடனான குழு பி போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாக, அவ்வணியின் தலைவர் ஹட்-ட்ரிக் கோல்களைப் பெற்றதோடு, உஸ்மான் டெம்பிலி இரு கோலைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், பெல்ஜியக் கழகமான கிளப் புரூகேயின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியன் புலிசிச் பெற்றிருந்தார்.

இதேவேளை, சேர்பியக் கழகமான றெட் ஸ்டார் பெல்கிரேட் அணியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலிக்குமிடையிலான குழு சி போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X