2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பஹ்ரேய்ன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் வெட்டல்

Editorial   / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல், மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்டேரி போத்தாஸை முந்த விடாமல் பஹ்ரேய்ன் கிரான்ட் பிறிக்ஸை வென்று கொண்டார்.

இப்பந்தயத்தின் இறுதிச் சுற்றில், தன் பின்னாலேயே வந்த வல்டேரி போத்தாஸை முந்த விடாமல் செய்து, இப்பருவகாலத்தின் இரண்டாவது பந்தயமாக அமைந்த இப்பந்தயத்திலும் செபஸ்டியன் வெட்டல் வென்று கொண்டார்.

இரண்டாமிடத்தைப் பெற்ற வல்டேரி போத்தாஸ், பந்தயத்தை மூன்றாவதாக ஆரம்பித்தபோதும் முதலாவது மூலையிலேயே, பந்தயத்தை இரண்டாமிடத்திலுருந்து ஆரம்பித்த செபஸ்டியன் வெட்டலின் சக பெராரி அணி பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனனை முந்தியிருந்தார்.

செபஸ்டியன் வெட்டல் பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்து ஆரம்பத்தில் பந்தயத்தைக் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு முன்னரான ஐந்து சுற்றுக்களிலும் செபஸ்டியன் வெட்டலுடனான இடைவெளியை ஐந்து செக்கன்களாகக் குறைத்து இறுதிச் சுற்றில் அவர் பின்னால் வந்து முதலாவது மூலையில் முந்த முயன்றபோதும் வல்டேரி போத்தாஸின் இம்முயற்சியை செபஸ்டியன் வெட்டல் வெற்றிகரமாகத் தடுத்திருந்தார்.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்பந்தயத்தில், கிமி றைக்கோனனின் இரண்டாவது டயர் மாற்றத்தின்போது, பெராரி அணியின் இயந்திரக் கைவினைஞரொருவரின் மேலால் காரைச் செலுத்திய நிலையில் குறித்த இயந்திரக் கைவினைஞர் காயமடைந்திருந்தார்.

கிமி றைக்கோனனின் இடது பின்புறச் சக்கரம் அகற்றப்படுவதற்கு முன்னரே, அவர் அவ்விடத்திலிருந்து அகலுவதற்கான பச்சை விளக்கு சமிக்ஞை வழங்கப்பட்ட நிலையில், குறித்த இடது சக்கரத்தை அகற்ற அதற்கு முன்னலிருந்த குறித்த இயந்திரக் கைவினைஞரின் காலிலேயே அச்சக்கரம் மோதியிருந்தது. குறித்த இயந்திரக் கைவினைஞர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அவருக்கு காலில் உடைவு ஏற்பட்டத்தை பெராரி அணி பின்னர் உறுதிப்படுத்தியிருந்தது.

அந்தவகையில், மூன்றாமிடத்தை கிமி றைக்கோனன் பெறுவதாக இருந்தபோதும் குறித்த சம்பவம் காரணமாக இரண்டு வெவ்வேறான டயர்களைக் கொண்டிருந்தமை காரணமாக பந்தயத்தில் மீண்டும் சேர கிமி றைக்கோனன் அனுமதிக்கப்படவில்லை.

பாதுகாப்பற்ற வெளியேற்றத்துக்காக பெராரி அணிக்கு 50,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரண்டாவது பயிற்சியின்போதும் இதே வகையான பாதுகாப்பற்ற வெளியேற்றத்துகாக கிமி றைக்கோனனுக்கும் பெராரி அணிக்கும் 5,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அனுமதிக்கப்படாத கியர் பொக்ஸ் மாற்றம் காரணமாக ஒன்பதாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், பந்தயத்தின் ஒரே நகர்வில் மூன்று கார்களை முந்தியது உட்பட அபாரமான முந்துகைகளை மேற்கொண்டு மூன்றாமிடத்தைப் பெற்றார்.

றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டேனியல் றிச்சியார்டோ பந்தயத்தை விலகியதைத் தொடர்ந்து, மெய்நிகராக பந்தயம் நிறுத்தப்பட்டபோது, டயர் மாற்றத்தின் நேர்ப்பாதையிலேயே மக்கலரென் அணியின் ஸ்பெய்ன் ஓட்டுநரான பெர்ணான்டோ அலோன்ஸோவை முந்தியதோடு, முதலாவது மூலைக்குள் போர்ஸ் இந்தியா அணியின் பிரான்ஸ் ஓட்டுநரான எஸ்டெபன் ஒக்கோனையும் றெனோல்ட் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ ஹல்கென்பேர்க்கையும் லூயிஸ் ஹமில்டன் முந்தியிருந்தார்.

ஐந்தாவது சுற்றில் ஆறாவதாகவிருந்த லூயிஸ் ஹமில்டன், பின்னர் அடுத்த சுற்றில் ஹாஸ் அணியின் டென்மார்க் ஓட்டுநரான கெவின் மக்னுசன்னை முந்தியதோடு, எட்டாவது சுற்றில் டோரோ றோஸோ அணியின் பிரான்ஸ் ஓட்டுநரான பியரி ஹஸ்லியை முந்தியிருந்தார். இதுதவிர, நான்காவது சுற்றின் முதலாவது வளைவில் தன்னை முந்த முயன்ற றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனுடனான மோதலின்போதும் லூயிஸ் ஹமில்டன் தப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், இரண்டு பந்தயங்களின் முடிவில் இரண்டு வெற்றிகளுடன், இவ்வாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் செபஸ்டியன் வெட்டல் முதலிடத்தில் உள்ளதோடு, அவரை விட 17 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள லூயிஸ் ஹமில்டன் இரண்டாமிடத்திலும் 22 புள்ளிகளுடன் வல்டேரி போத்தாஸ் மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றனர். பெர்ணான்டோ அலோன்ஸோ 16 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் காணப்படுவதோடு, 15 புள்ளிகளோடு கிமி றைக்கோனன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .