2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாதுகாப்பு நிலமையை கண்காணிக்கும் பங்களாதேஷ்

Editorial   / 2019 மே 08 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கையின் பாதுகாப்பு நிலைமையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கண்காணிக்கிறது.

அந்தவகையில், முடிவொன்றை எடுக்கும் முன்னர், இலங்கை கிரிக்கெட் சபை உள்ளடங்கலான பல்வேறு அதிகாரிகளின் ஆலோசனையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பெற்றுக் கொள்ளும் என அச்சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி நிஸாமுடீன் செளத்ரி தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் பிறீமியர் லீக்கை டிசெம்பரில் நடாத்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ள நிலையில், டிசெம்பரில் நடைபெறுவதாக இருந்த மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது இவ்வாண்டு ஜூலை 25, 27, 29ஆம் திகதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அணிகள் அஞ்சுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்ட அணியின் சுற்றுப்பயணமானது காலவரையற்ற ரீதியில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல்கள் இரண்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலொன்றைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கான பங்களாதேஷின் சுற்றுப்பயணம் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தாக்குதல் இடம்பெற்ற அல் நூர் பள்ளிவாசலை விட்டு துப்பாக்கிதாரி வெளியேறிய சில நிமிடங்களில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷின் பலர் சென்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .