2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பின்தங்கியிருந்து வந்து வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், எம்போலி அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் பின்தங்கியிருந்த ஜுவென்டஸ், தமது நட்சத்திர முன்கள வீரர் கிறிஸ்டியாடியானோ ரொனால்டோ பெற்ற இரண்டு கோல்களால் வென்றது.

இப்போட்டிக்கான ஆரம்ப அணியில் இடம்பெற்றிருந்த ஜுவென்டஸின் அணித்தலைவர் ஜோர்ஜியோ செலினி, போட்டிக்கு முன்பான தயார்ப்படுத்தல் பயிற்சியின்ன்போது பிரச்சினையொன்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து டேனியல் றூகனியால் அணியில் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து ஓடிவந்த எம்போலியின் மத்தியகள வீரர் ஆவ்ரி ஆனா மேற்கொண்ட பந்துப்பரிமாற்றம், ஜுவென்டஸின் றொட்றிகோ பென்டாக்கூரில் பட்டு எம்போலியின் பிரான்ஸெஸ்கோ கப்புட்டோவின் பாதையில் வர, அவர் அதை போட்டியின் 28ஆவது நிமிடத்தில் கோலாக்க, இப்பருவகாலத்தில் முதற்தடவையாக முதற்பாதியில் ஜுவென்டஸ் பின்தங்க வேண்டி ஏற்பட்டது.

எனினும், இரண்டாவது பாதியில் ஜுவென்டஸ் மீண்டு வந்த நிலையில், அவ்வணியின் மிரலெம் பிஜானிக் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது. பின்னர், எம்போலி அணியின் இஸ்மாயில் பெனாசீர், ஜுவென்டஸின் போலோ டிபாலாவிடம் தமது பகுதிக்குள் வைத்து பந்தை இழந்ததுடன், இருவரும் வீழ்ந்த நிலையில் வழங்கப்பட்ட பெனால்டியை போட்டியின் 54ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோலாக்க கோலெண்ணிக்கையை ஜுவென்டஸ் சமப்படுத்தியது.

பின்னர், அடுத்த 16 நிமிடங்களில் பெனால்டி எல்லைப் பகுதிக்கு வெளியே பந்துப் பரிமாற்றமொன்றைப் பெற்ற ரொனால்டோ, 25 மீற்றர்கள் தூரத்திலிருந்து பெற்ற அபாரமான கோலோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .