2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரான்ஸ்: 2ஆம் நாளில் அதிர்ச்சிகள் இல்லை

Editorial   / 2018 மே 30 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் நாளில், முன்னிலை வீரர்களில் அநேகமானோர் வெற்றிபெற்று, இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற்றனர். தரநிலை பெற்ற வீரர்களில் தோல்வியடைந்த அனைவரும், 20க்கும் மேற்பட்ட தரநிலையைக் கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.

பெண்களின் 2ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, ஐ.அமெரிக்காவின் டானியல் கொலின்ஸை, 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றிகொண்டு, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார். அதேபோல், 6ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, தனது சக நாட்டு வீராங்கனை பார்பொரா கிரெஜ்சிகோவாவை, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

8ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, 15ஆம் நிலை வீராங்கனையான ஐ.அமெரிக்காவின் கொகோ வன்டெவெகே ஆகியோரும், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

குறிப்பிடத்தக்க தோல்வியாக, 20ஆம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்தஸ்ஜா செவஸ்டோவா, கொலம்பியாவின் மரியானா துக்-மரினோவிடம், 6-4, 1-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். அதேபோன்று, 29ஆம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கிறிஸ்டினா மலடெனோவிச், ஜேர்மனியின் அன்ட்ரியா பெட்கொவிச்சிடம், 6-7, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆண்களில், 7ஆம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியம், பேலாரஸின் இலியா இவஷ்காவை, 6-2, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார். அதேபோல், 20ஆம் நிலையில் உள்ள சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், பிரேஸிலின் றொஜெரியோ துட்ரா சில்வாவை, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

குறிப்பிடத்தக்க தோல்விகளாக, 22ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் பிலிப் கோல்ஷ்ரெய்பெர், குரோஷியாவின் பி. கொரிச்சிடம் 3-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

அதேபோல், 23ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, ஜேர்மனியின் குலெர்மோ கார்சியா லொபஸிம், 2-6, 6-3, 6-4, 6-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 29ஆம் நிலை வீரரான லக்ஸம்பேர்க்கின் கைல்ஸ் மல்லர், லத்வியாவின் ஏர்னெஸ்ட்ஸ் குல்பிஸிடம், 6-2, 4-6, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இப்போட்டிகளின் முதலாவது நாளிலேயே, நடப்புச் சம்பியனான ஜெலினா ஒஸ்தபென்கோவும், 7 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் வென்ற வீனஸ் வில்லியம்ஸும் தோற்கடிக்கப்பட்டிருந்தனர். எனவே, அதிர்ச்சிகரமான நாளாக அது அமைந்திருந்தது. மாறாக 2ஆம் நாள், ஓரளவு எதிர்பார்த்த வெற்றிகளைக் கொடுத்த நாளாக அமைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X