2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிரேஸிலிய கிரான்ட் பிறிக்ஸை வென்றார் வெட்டல்

Editorial   / 2017 நவம்பர் 13 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலிய கிரான்ட் பிறிக்ஸை வென்ற, பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல், இவ்வாண்டு ஜூலைக்குப் பின்னர் தனது முதலாவது வெற்றியைப் பதிவுசெய்து கொண்டார்.

நேற்று  இடம்பெற்ற இப்பந்தயத்தை முன்னணியில் ஆரம்பித்த மெர்சிடிஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸை தொடக்கத்திலேயே முந்திய செபஸ்டியன் வெட்டல், அதன்பின்னர் பந்தயத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், மெக்ஸிக்கோவில் இப்பந்தயத்துக்கு முன்னர் இடம்பெற்ற பந்தயத்தில் தனது நான்காவது உலகப் பட்டத்தை வென்ற மெர்சிடிஸ் அணியின் ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், இப்பந்தயத்துக்கான தகுதிநிலைப் பந்தயத்தின்போது விபத்துக்குள்ளாகி, இப்பந்தயத்தை இறுதியாக ஆரம்பித்திருந்தார்.

இருந்தபோதும் ஆரம்ப சுற்றுக்களில் அதிவேகமாக தனது காரைச் செலுத்தி ஏனையவற்றை முந்தி 20 சுற்றுக்களிலேயே ஆறாமிடத்தைப் பிடித்து இறுதியாக நான்காமிடத்தை லூயிஸ் ஹமில்டன் பெற்றிருந்தார். 30ஆவது சுற்றின்போது செபஸ்டியன் வெட்டல், வல்ட்டேரி போத்தாஸ், வெட்டலின் சக பெராரி அணி ஓட்டுநரான பின்லாந்தின் கிமி றைக்கோனன், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் ஆகியோர் தமது டயர்களை மாற்றச் சென்றபோது பந்தயத்தின் முதல்வராகவும் லூயிஸ் ஹமில்டன் காணப்பட்டிருந்தார்.

இப்பந்தயத்தில் இரண்டாமிடத்தை வல்ட்டேரி போத்தாஸ் பெற்றதுடன், மூன்றாமிடத்தை கிமி றைக்கோனன் பெற்றனர்.

இந்நிலையில், இப்பருவகால இறுதியுடன் ஓய்வுபெறும் வில்லியம்ஸ் அணியின் பிரேஸிலின் ஓட்டுநரான பிலிப்பி மாஸா, தனது சொந்த மண்ணில் இறுதியாக இடம்பெற்ற பந்தயத்தில் ஏழாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அந்தவகையில், இப்பந்தயத்தைத் தொடர்ந்து, இம்மாதம் 26ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவிருக்கும் பந்தயத்துடன் போர்மியுலா வண்ணின் இப்பருவகாலம் முடிவடைகிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .