2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிளிஸ்கோவா, நடால், பெடரர் வெற்றி

Editorial   / 2017 செப்டெம்பர் 03 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் 6ஆவது நாள் போட்டிகளில், உலகின் முதல்நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, முதல்நிலை வீரரான ரபேல் நடால், 3ஆம் நிலை வீரரான ரொஜர் பெடரர் ஆகியோர் வெற்றிபெற்று, 4ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 27ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஸாங் ஷுவாயை எதிர்கொண்டார். முதல்நிலை வீராங்கனை, இலகுவான வெற்றியைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முதலாவது செட்டை, 3-6 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் இழந்தார்.

2ஆவது செட்டில் போராடிய அவர், கடுமையான போராட்டத்தின் பின்னர் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் 2ஆவது செட்டைக் கைப்பற்றியதோடு, 3ஆவது செட்டை, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, போட்டியில் வென்றார்.

4ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ஐ.அமெரிக்காவின் ஷெல்பி ரொஜர்ஸை எதிர்கொண்டு, 6-4, 7-5 என்ற நேரடி செட் கணக்கில் வெற்றி, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

10ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, 20ஆம் நிலை வீராங்கனையான ஐ.அமெரிக்காவின் கொகோ வன்டெவெகேயை எதிர்கொண்டார். எனினும், ஆதிக்கம் செலுத்திய வன்டெவெகே, 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

12ஆம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஒஸ்தபென்கோ, ரஷ்யாவின் டரியா கஸட்கினாவை எதிர்கொண்டார். இலகுவான வெற்றியாக ஜெலினாவுக்கு அமையுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், உலகில் 38ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள டரியா, 6-3, 6-2 என்ற, இலகுவான நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, அதிர்ச்சி வைத்தியம் வழங்கினார்.

ஆண்கள் ஒற்றையர் போட்டியில், உலகின் 1ஆம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், ஆர்ஜென்டீனாவில் லியோனார்டோ மயேரை எதிர்கொண்டார்.  எனினும், கடுமையாகப் போராட வைக்கப்பட்ட நடால், முதலாவது செட்டை 6-7 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார். ஆனால், அடுத்த 3 செட்களையும் 6-3, 6-1, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற அவர், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

3ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 31ஆம் நிலை வீரரான ஸ்பெய்னின் ஃபெலிசியானோ லோபஸை எதிர்கொண்டார். முதலிரு போட்டிகளிலும் தடுமாறி வெற்றிபெற்றிருந்த பெடரர், இந்தப் போட்டியில் 6-3, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஏனைய வீரர்களில் 6ஆம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியம், 9ஆம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கொபின், 15ஆம் நிலை வீரரான ஐ.அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸ் ஆகியோரும் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .