2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெண்களின் உலக இருபதுக்கு – 20: அரையிறுதிப் போட்டிகள் நாளை

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், அன்டிகுவாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதுவதற்காக அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இந்திய அணிகள் பலப்பரீட்சை நடாத்துகின்றன.

அந்தவகையில், அன்டிகுவாவில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கி ஆரம்பமாகவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில், குழு ஏ-இன் வெற்றியாளர்களான மேற்கிந்தியத் தீவுகளும் குழு பில் இரண்டாமிடம் பெற்ற அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக இருபதுக்கு – 20 தொடரின் இறுதிப் போட்டியில், அதற்கு முதல் இடம்பெற்ற மூன்று உலக இருபதுக்கு – 20 தொடர்களிலும் வரிசையாக சம்பியனாகியிருந்த அவுஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் சம்பியனாகியிருந்த நிலையில் அதையொத்த போட்டியாகவே இப்போட்டியும் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்த வரையில், அவ்வணியின் நட்சத்திர வீராங்கர வீராங்கனையாக தெயெந்திர டோட்டினே காணப்படுகின்றார். சகலதுறை வீராங்கனையான இவர் தொடரின் ஆரம்பத்தில் பந்துவீச்சில் பிரகாசித்து அதை குழுநிலை இறுதிப் போட்டி வரை தொடர்ந்ததுடன் பிற்பகுதிகளில் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்தார்.

ஆக, டோட்டினுடன் சேர்ந்து ஒரு போட்டியில் பந்துவீச்சில் பிரகாசித்த அணித்தலைவி ஸ்டபனி டெய்லர், ஒரு போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை ஹேலி மத்தியூஸ் ஆகியோர் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறலாம்.

மறுபக்கமாக, அவுஸ்திரேலிய அணியின் வெற்றிவாய்ப்புகள் காயமடைந்துள்ள அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையும் விக்கெட் காப்பாளருமான அலைஸா ஹீலி இப்போட்டியில் விளையாடுவாரா என்பதிலேயே தங்கிக் காணப்படுகிறது. இப்போட்டியில் விளையாடி இத்தொடரின் தான் துடுப்பெடுத்தாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தான் வழங்கிய அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டத்தை வழங்கினால் அவுஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதேவேளை, ஹீலி விளையாடவிட்டால் கூடா, எலைஸ் விலானி, பெத் மூனி, மெக் லன்னிங், றேச்சன் ஹெய்ன்ஸ், எலைஸ் பெரி என அதிரடியாக விளையாடக்கூடிய வீராங்கனைகளும் வேகப்பந்துவீச்சாளர் மேகன் ஸ்கூட், சுழற்பந்துவீச்சாளர்கள் சோபி மொலினெக்ஸ், அஷ்லெய் கார்ட்னர் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பலத்த சவாலை வழங்குவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த போட்டியைத் தொடர்ந்து அன்டிகுவாவில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில் குழு பியின் வெற்றியாளர்களான இந்தியா, குழு ஏயில் இரண்டாமிடம் பெற்ற இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, அனுபவம் வாய்ந்த நின்று நிலைத்து துடுப்பெடுத்தாடக் கூடிய மிதாலி ராஜ்ஜையும் அதிரடி வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனாவையும் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிகளாகக் கொண்டிருப்பது பலமாக இருப்பதுடன், மத்தியவரிசையில் களமிறங்குகின்ற அதிரடியாக துடுப்பெடுத்தாடுகின்ற அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளர் இவர்களுக்கு மேலதிகப் பலத்தை வழங்குகின்றார். பந்துவீச்சைப் பொறுத்தவரை, பூனம் யாதவ், தீப்தி ஷர்மா, ராதா யாதவ்வுடன் அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளதமின் சுழற்பந்துவீச்சே அணியின் நாதமாக உள்ளது. இவர்கள் வழமை போன்று ஓட்டங்களைக் கட்டுப்படுத்தினால் இந்தியா இலகுவாக இங்கிலாந்தை வீழ்த்தலாம்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு டேனியல் வியாட், டம்மி பெமூண்ட், நட்டாலி ஷிவர், அணித்தலைவி ஹீதர் நைட் ஆகியோர் எவ்வாறு ஓட்டங்களைப் பெறுகின்றனர் என்பதிலேயே அவர்களின் வெற்றிவாய்ப்பு தங்கியுள்ளது. பந்துவீச்சுப்பக்கம் வேகப்பந்துவீச்சாளர் அன்யா ஷெர்ஷோபிள், சுழற்பந்துவீச்சு வீராங்கனை கிறிஸ்டி கோர்டன் ஆகியோர் எவ்வாறு விக்கெட்டுகளைக் கைப்பற்றுகின்றனர் என்பதிலேயே இங்கிலாந்தின் வெற்றிவாய்ப்பு தங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X