2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பெனால்டியில் ஏ.சி மிலனை வென்றது மன்செஸ்டர் யுனைட்டெட்

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளைக் கொண்ட ஏழாவது சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், வேல்ஸின் தலைநகர் கார்டிஃப்பில் நேற்று  இடம்பெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுடனான போட்டியில் பெனால்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

இப்போட்டியின் 14ஆவது நிமிடத்தில் சக மத்தியகளவீரர் நெமஞ்சா மட்டிக்கிடமிருந்து பெற்ற பந்தை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் கோலாக்கிய நிலையில் ஆரம்பத்திலேயே மன்செஸ்டர் யுனைட்டெட் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் அடுத்த 12ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 35 அடி தூரத்தில் நெமஞ்சா மட்டிக் பந்தை இழந்து, அது ஏ.சி மிலனின் முன்களவீரர் சுஸோவிடம் சென்ற நிலையில் அவர் அதைக் கோலாக்க கோலெண்ணிக்கையை ஏ.சி மிலன் சமப்படுத்தியது.

அந்தவகையில், முதற்பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், போட்டியின் 60ஆவது நிமிடத்தில் ஏ.சி மிலனின் முன்களவீரர் சமு கஸ்டில்லெஜோ தலையால் முட்டிய பந்தானது, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரர் விக்டர் லின்டிலொஃப்பில் பட்டு ஓவ்ண் கோலான நிலையில் ஏ.சி மிலன் முன்னிலை பெற்றது.

எனினும், அடுத்த 12ஆவது நிமிடத்தில் சக முன்களவீரர் அன்டோனி மார்ஷியலிடமிருந்து பெற்ற பந்தை, மாற்றுவீரராகக் களமிறங்கிய மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான ஜெஸி லிங்கார்ட் கோலாக்க்கியதோடு கோலெண்ணிக்கை சமமானதோடு, போட்டியானது இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் வழமையான நேரத்தில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் பெனால்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக ஜெஸி லிங்கார்ட், அஷ்லி யங், மேஸன் கிறீன்வூட், ஏஞ்சல் கோமஸ், டேனியல் ஜேம்ஸ் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்த நிலையில், ஏ.சி மிலன் சார்பாக ஹகன் கல்ஹனொக்லு, ஜியகொமோ பொனவெந்தூரா, அன்ட்ரே சில்வா, றேட் க்றுனிச் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்தபோதும், டேனியல் மல்டினியின் பெனால்டியை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல்காப்பாளர் டேவிட் டி கியா தடுத்திருந்த நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட் 5-4 என்ற ரீதியில் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X