2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டு: ‘எழுத்துமூலம் அறிவித்தால் விசாரணை’

Nirshan Ramanujam   / 2017 ஜூலை 20 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் போட்டி நிர்ணயம் இடம்பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, எழுத்துமூலமாக அறிவிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தத் தயார் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று (19) தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.  

இதன்போது, அர்ஜுனவின் குற்றச்சாட்டுத் தொடர்பில் அமைச்சின் தீர்மானம் பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

“இது இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. அர்ஜுன ரணதுங்க, இந்த விடயத்தை அப்போதே சொல்லியிருந்தால், பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். ஆனால் காலம் தாழ்த்தியே இதனை முன்வைத்திருக்கிறார். எவ்வாறெனினும், எழுத்துமூலமாக அறிவிக்கும் பட்சத்தில், நாம் விசாரணை நடத்தத் தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

கேள்வி: கிரிக்கெட் சபைத் தலைமைப் பதவியை இரண்டு ஆண்டுகளுக்குத் தரும் பட்சத்தில், அடுத்த உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ளக் கூடிய அணியைத் தயார் செய்வதாக அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். அவருக்கான வாய்ப்புக் குறித்து கலந்துரையாடவில்லையா? 

பதில்: அவர் சிறந்த வீரர் என்பதை நான் அறிவேன். எனினும், கிரிக்கெட் சபைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால் தெரிவாகவில்லை. அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவாராயின், அது குறித்துப் பார்க்கலாம். 

கேள்வி: கிரிக்கெட் தொடர்பில் நீங்கள் வெளியிட்ட முரண்பாடான கருத்து, இப்போது பரவலாக, பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்படுகிறதே? 

பதில்: நான் எந்தவொரு வீரருடனும் முரண்பட்டது கிடையாது. குறிப்பிட்ட ஒரு வீரர் தான், பிரச்சினையாக்கிக் கொண்டார். அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. விளையாட்டுத்துறை அமைச்சராக, விளையாட்டைப் பற்றி பேசுவதற்கு எனக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. 

எமது வீரர்கள், உளவியல் ரீதியாக முன்னேற்றமடையக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அடுத்து, இந்தியத் தொடரில் விளையாடுவதற்காக ஆரோக்கியமான மனநிலையை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கு இடங்கொடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். 

(புகைப்படம்: நிசால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .