2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போல்ட்டின் உபாதை: ஏற்பாட்டாளர்கள் மீது குற்றச்சாட்டு

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜாம்பவனான உசைன் போல்ட்டின் இறுதிப் போட்டி, சோகமான முறையில் நிறைவடைவதற்கு, உலக சம்பியன்ஷிப் தொடரின் ஏற்பாட்டாளர்களே காரணமென, உசைன் போல்ட்டின் சக வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போட்டிக்காக வீரர்கள் தயாராகிய பின்னர், அவர்களைப் போட்டிக்காக இறுதியாக அழைப்பதற்குக் காணப்படும் அறையில், தாங்கள் அதிக நேரம் தங்கவைக்கப்பட்டதாக, அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

“அழைக்கும் அறையில், எங்களை அதிக நேரம் வைத்திருந்தனர் என நான் நினைக்கிறேன். அந்த நடைக்கான தூரமும் அதிகமானது. உசைன் போல்ட், மிகவும் குளிராக உணர்ந்தார். உசைன் என்னிடம், ‘யொஹான், இது பைத்தியக்காரத்தனமானது. 40 நிமிடங்களும் 2 பதக்கம் வழங்கல் நிகழ்வுகளும், எங்களுடைய போட்டிக்கு முன்னர் இடம்பெறுகின்றன’ என்று தெரிவித்தார்” என, உசைன் போல்ட்டின் சக வீரரான யொஹான் பிளேக் குறிப்பிட்டார்.

நீண்ட நேரமாகக் காத்திருந்ததாகவும், நீண்ட நேரம் தயாராகிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்த பிளேக், “உண்மையான சம்பியன் ஒருவர், உண்மையான ஜாம்பவான் ஒருவர், அவ்வாறு தடுமாறியதைப் பார்க்கும் போது கவைலயாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.

ஜமைக்காவின் ஏனைய வீரர்களும், இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஜமைக்க வீரர்களின் விமர்சனத்தை, ஐக்கிய அமெரிக்காவின் ஜஸ்டின் கட்லினும் முன்வைத்தார்.

“தொலைக்காட்சியில் பார்க்கும் பார்வையாளர்கள், எல்லாவற்றையும் நேரத்துடன் பார்ப்பதற்கு, அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென்பதை நான் அறிவேன். ஆனால், எங்களுடைய வழக்கமான ஆடைகள் இன்றி, நீண்ட நேரமாக, மைதானத்தில் நிற்க வைக்கப்பட்டோம் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய வியர்வை, உடல் சூடு எல்லாவற்றையும் நான் இழந்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலைமை, உசைன் போல்ட்டின் உபாதைக்கு வழிவகுத்ததா என்று கேட்கப்பட்டபோது, “அப்படி என்று தான் நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

கட்லின், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், போல்ட்டை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X