2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்செஸ்டர் யுனைட்டெட்டை வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் குழுநிலைப் போட்டிகளில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, ஜேர்மனிய புண்டெலிஸ்கா சம்பியன்களான பெயார்ண் மியூனிச், மற்றொரு இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் ஆகியன வென்றுள்ளன.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குழு எச் போட்டியொன்றில், கிறிஸ்டியானோ ரொனால்டோ வழங்கிய பந்தை போலோ டிபாலா கோலாக்கியதோடு 1-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.

இந்நிலையில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குழு ஜி போட்டியொன்றில், 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசுக் கழகமான விக்டோரியா பிளேஸின் அணியை ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கரிம் பென்ஸீமா, மார்ஷெலோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, விக்டோரியா பிளேஸின் சார்பாகப் பெறப்பட்ட கோலை பற்றிக் குறோஸோவிஸ்கி பெற்றார்.

இதேவேளை, உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்க்கின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எவ் போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, டேவிட் சில்வா, அய்மெரிக் லபோர்ட்டே, பெர்ணார்டோ சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று  அதிகாலை இடம்பெற்ற குழு ஜி போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யக் கழகமான சி.எஸ்.கே.ஏ மொஸ்கோ அணியை றோமா வென்றது. றோமா சார்பாக, எடின் டெக்கோ இரண்டு கோல்களையும் சென்கிஸ் அன்டர் ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, கிரேக்கக் கழகமான ஏ.ஈ.கே ஏதென்ஸ் அணியின் மைதானத்தில் இன்று  முன்தினம் இடம்பெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, ஸ்கெவி மார்ட்டின்ஸ், றொபேர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .