2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மன்செஸ்டர் யுனைட்டெட்டை வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியொன்றில் மன்செஸ்டர் யுனனைட்டெட்டை, பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இப்போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியின் முதற்பாதியில் கோலெதுவுப் பெறப்படாமல் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது பாதியின் 53ஆவது நிமிடத்தில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் மத்தியகள வீரரான ஏஞ்சல் டி மரியா செலுத்திய மூலையுதையை, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் பிறஸ்னல் கிம்பெம்பே கோலாக்க, அவ்வணி முன்னிலை பெற்றது.

பின்னர், அடுத்த ஏழாவது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா வழங்கிய பந்தை பரிஸ்ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்கள வீரர் கிலியான் மப்பே கோலாக்கியதோடு, இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.

போட்டி முடிவடையும் தருணத்தில் இப்போட்டியின் தனது இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகள வீரர் போல் பொக்பா, சிவப்பு அட்டை காட்டப்பட்டுக் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டநிலையில், பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில், அடுத்த மாதம் ஆறாம் திகதி இடம்பெறவுள்ள இரண்டு அணிகளுக்குமிடையிலான இறுதி 16 அணிகளுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியைத் தவறவிடுகின்றார்.

இதேவேளை, இப்போட்டியின் முதற்பாதியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகள வீரரான ஜெஸி லிங்கார்ட், முன்களவீரர் அன்டோனி மார்ஷியல் ஆகியோர் காயமடைந்து களத்திலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்கள வீரர்களான நேமர், எடின்சன் கவானி ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டியிலேயே பங்கேற்றிருக்கவில்லை.

இப்போட்டிக்கு முன்பதாக, தற்காலிக முகாமையாளராக ஒலெ குனார் சொல்க்ஜர் பதவியேற்றதிலிருந்து 11 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த மன்செஸ்டர் யுனைட்டெட், முதற்தடவையாக அவரின் கீழ் இப்போட்டியில் தோல்வியைத் தழுவுகிறது.

இதேவேளை, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற போர்த்துக்கல் கழகமான போர்ட்டோவுடனான, இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான றோமா வென்றிருந்தது. றோமா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் நிக்கொலோ ஸனியோலா பெற்றதோடு, போர்ட்டோ சார்பாகப் பெறப்பட்ட கோலை, அட்ரியன் லொபெஸ் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .