2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மலிங்கவுக்கு பிரியாவிடை இல்லை?

Editorial   / 2018 ஜூலை 23 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான லசித் மலிங்கவுக்கு பிரியாவிடைப் போட்டியொன்று வழங்கப்படாது  எனத் தெரிகின்றது.

ஏனெனில், தங்களது கட்டமைப்புகளில் தற்போது இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் கிரேமி லப்ரோய் கூறியுள்ளார்.

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி, லசித் மலிங்கவின் பிரியாவிடைப் போட்டியாக பயன்படுத்தப்படுமான என வினவப்பட்டபோது,

“இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டமைப்புகளில் பிரியாவிடைகள் தற்போது இல்லை. இதை எங்களது கொள்கையாக இலங்கை கிரிக்கெட் சபை கொண்டுள்ளது. ஆகவே, மலிங்கவுக்கான பிரியாவிடைப் போட்டியொன்று தற்போதையை நிலைமைகளில் இல்லை. ஏனெனில், அவர் இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் பங்கெடுப்பதில்லை.

எவ்வாறெனினும், சர்வதேச கட்டமைப்பில் கிரிக்கெட் வீரரொருவர் இருந்தால் அது வேறு விடயம். உதாரணத்துக்கு, தற்போதும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகின்ற ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார். ஆம், அவர் தனது இறுதி டெஸ்டில் விளையாடும்போது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரியாவிடையொன்றைப் பற்றித் தீர்மானிப்போம்” என்று கிரேமி லப்ரோய் கூறியுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் கருத்துத் தெரிவித்த லசித் மலிங்க, மன ரீதியாக தான் கிரிக்கெட் விளையாடி முடித்து விட்டதாகவும் இனியும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவேன் என தான் நினைக்கவில்லையென்றும் தனது ஓய்வை விரைவில் அறிவிக்க தான் திட்டமிடுவதாகவும் கூறியிருந்தார்.

34 வயதான மலிங்க, 68 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 204 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 301 விக்கெட்டுகளையும் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளையும் இதுவரையில் கைப்பற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .