2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் ஹலெப், பிளிஸ்கோவா, இஸ்னர்

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெற்றுவரும் மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், ஏழாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, நடப்புச் சம்பியனான ஜோன் இஸ்னர் ஆகியோர் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், சீனாவின் வாங் குயாங்கை எதிர்கொண்ட றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், சக செக் குடியரசு வீராங்கனையான மார்கெட்டா வொன்ட்ரூசோவானை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்ற கரோலினா பிளிஸ்கோவா அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

அந்தவகையில், இன்று அதிகாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் சிமோனா ஹலெப்பும், கரோலினா பிளிஸ்கோவாவும் மோதுகின்றனர். இப்போட்டியில் வென்றால் தரவரிசையில் முதலாமிடத்துக்கு சிமோனா ஹலெப் முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று அதிகாலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட்டை 7-6 (7-1), 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்ற உலகின் ஒன்பதாம்நிலை வீரரான ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னர் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று அதிகாலை இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டனில் மெட்வெடெவ்வை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .