2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2019 மார்ச் 31 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு, நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முன்னேறியுள்ளது.

ஃபுல்ஹாமின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு மன்செஸ்டர் சிற்றி முன்னேறியிருந்தது.

அந்தவகையில், ஃபுல்ஹாமின் மத்தியகளவீரர் டிமோதி ஃபொசு-மென்ஸாவின் தவறைப் பயன்படுத்தி பந்தைக் கைப்பற்றிக் கொண்ட மன்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரரான சேர்ஜியோ அகுரோ வழங்கிய பந்தை, கோல் கம்பத்திலிருந்து 20 அடி தூரத்திலிருந்து போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே அவரின் சக மத்தியகள வீரர் பேர்ணார்டோ சில்வா கோலாக்க ஆரம்பத்திலேயே மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, போட்டியின் முதல் 15 நிமிடங்களில், கோல் கம்பத்தை நோக்கி 10 உதைகளைக் கொண்டிருந்த மன்செஸ்டர் சிற்றி, பேர்ணார்டோ சில்வாவிடமிருந்து பெற்ற பந்தை ஃபுல்ஹாமின் கோல் காப்பாளர் சேர்ஜியோ றிக்கோவுக்கு மேலால் கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து தூக்கி போட்டு சேர்ஜியோ அகுரோ பெற்ற கோலுடன் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

அந்தவகையில், இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள லிவர்பூல் பெற்றுள்ள 76 புள்ளிகளை விட ஒரு புள்ளி அதிகமாக 77 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது.

இதேவேளை, தமது நிரந்தர முகாமையாளரான ஒலெ குனார் சொல்க்ஜையர் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட பின்னர் தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வட்ஃபேர்ட்டை மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், அன்டோனி மார்ஷியல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, வட்ஃபேர்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அப்துல்லாயு டூகரே பெற்றிருந்தார்.

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் முகாமையாளர் ஜொஸே மொரின்யோவை கடந்தாண்டு டிசெம்பரில் தற்காலிகமாகப் பிரதியீடு செய்திருந்த ஒலெ குனார் சொல்க்ஜர், மூன்றாண்டுகளுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .