2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதன்மை சகலதுறை வீரரானார் ஜடேஜா

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஏற்கெனவே முதலிடத்தில் உள்ள ஜடேஜா, ஷகிப் அல் ஹஸனை தற்போது முந்தி, டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  

நாளை மறுதினம் பல்லேகலயில் ஆரம்பமாகவுள்ள, இலங்கைக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள ஜடேஜா, 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இலங்கைக்கெதிரான தற்போதைய தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக உள்ளதோடு, 85 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.  

இதேவேளை, இலங்கைக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் பெற்ற செற்றேஸ்வர் புஜாரா, ஓர் இடம் முன்னேறி, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். 

இவை தவிர, இலங்கைக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அரைச்சதம், சதம் உள்ளிடங்கலாக 212 ஓட்டங்களைப் பெற்றுள்ள அஜின்கியா ரஹானே, ஐந்து இடங்கள் முன்னேறி, ஆறாமிடத்தைப் பிடித்துள்ளார்.  

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான இங்கிலாந்தின் தொடரில் சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய மொய்ன் அலி, சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு உயர்ந்ததுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், 21ஆம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.   

இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கெதிராக 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் அன்டர்சன், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், இரவிச்சந்திரன் அஷ்வினைப் பின்தள்ளி, இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.  

அணிகளுக்கான தரவரிசையில், மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.  

டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின்  தரவரிசை, இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் என்றவாறு அமைந்துள்ளது.  

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை, இரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொஷ் ஹேஸல்வூட், ரங்கன ஹேரத், கஜிஸ்கோ றபாடா, ஸ்டுவேர்ட் ப்ரோட், டேல் ஸ்டெய்ன், வேர்ணன் பிலாந்தர், நீல் வக்னர் ஆகியவாறு அமைந்துள்ளது.  

சகலதுறை வீரர்களுக்கான பட்டியல், இரவீந்திர ஜடேஜா, ஷகிப் அல் ஹஸன், இரவிச்சந்திரன் அஷ்வின், மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ், வேர்ணன் பிலாந்தர், ஜேஸன் ஹோல்டர், டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியவாறு அமைந்துள்ளது.  

துடுப்பாட்ட வீரர்களுக்கான வரிசை, ஸ்டீவன் ஸ்மித், ஜோ றூட், செற்றேஸ்வர் புஜாரா, கேன் வில்லியம்சன், விராத் கோலி, அஜின்கியா ரஹானே, ஜொனி பெயார்ஸ்டோ, அஸார் அலி, ஹஷிம் அம்லா, டேவிட் வோணர் என்றவாறு அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .