2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலாவது டெஸ்டில் பங்களாதேஷை வீழ்த்தியது சிம்பாப்வே

Editorial   / 2018 நவம்பர் 06 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சியல்ஹெட்டில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்டில் சிம்பாப்வே இன்றைய நான்காம் நாளில் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்றிருந்த சிம்பாப்வே அணியின் தலைவர் ஹமில்டன் மசகட்ஸா, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்திருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷோண் வில்லியம்ஸ் 88, பீற்றர் மூர் ஆட்டமிழக்காமல் 63, ஹமில்டன் மசகட்ஸா 52, றெஜிஸ் சகப்வா 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தஜியுல் இஸ்லாம் 6, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட நஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 143 ஓட்டங்களௌக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட அரிபுல் ஹக் ஆட்டமிழக்காமல் 41, முஷ்பிக்கூர் ரஹீம் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டென்டாய் சட்டாரா, சிகண்டன் ராசா ஆகியோர் தலா 3, கைல் ஜார்விஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஹமில்டன் மசகட்ஸா 48 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், தஜியுல் இஸ்லாம் 5, மெஹெடி ஹசன் மிராஸ் 3, நஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 321 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களையே பெற்று 151 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், இம்ருல் கைஸ் 43, அரிபுல் ஹக் 38 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட பிரெண்டன் மவுட்டா 4, சிகண்டன் ராசா 3, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட இன்னொரு வீரரான வெலிங்டன் மசகட்ஸா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஷோண் வில்லியம்ஸ் தெரிவானார்.

அந்தவகையில், சிம்பாப்வே பெற்ற குறித்த வெற்றியானது டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் அவ்வணி பெறும் முதலாவது வெற்றி என்பதோடு, 2001ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாடுகளில் அவ்வணி பெற்ற முதலாவது வெற்றியாக அமைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .