2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதலாவது டெஸ்டுடன் ஓய்வு பெறுகிறார் ஹேரத்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளில், உலகின் மிகவும் வெற்றிகரமான இடதுகைப் பந்துவீச்சாளரான இலங்கையின் ரங்கன ஹேரத், காலியில் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கின்ற இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டுடன் ஓய்வுபெறுகின்றார்.

முன்னரே இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்த ஹேரத், குறித்த இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடர்ந்து விளையாட முடியாதென தேர்வாளர்களிடம் தெரிவித்த நிலையிலேயே, 1999ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தை தான் மேற்கொண்ட காலியிலேயே ஹேரத் ஓய்வுபெறுகின்றார்.

பாகிஸ்தானுக்கெதிராக 2009ஆம் ஆண்டு காலியில் இடம்பெற்ற டெஸ்டில், தனது 31ஆவது வயதில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதிலிருந்தே தனது எழுச்சியை மேற்கொண்டிருந்த ஹேரத், தனது இறுதி டெஸ்டில் மேலுமொரு விக்கெட்டைக் கைப்பற்றினால், காலியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரனுடன் இணைந்து கொள்வார்.

40 வயதான ஹேரத்தின் ஓய்வு இலங்கையணியில் பாரியளவு வெற்றிடத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஹேரத்தை இப்போதைக்கு முதன்மை சுழற்பந்துவீச்சாளராக டில்ருவான் பெரேரா பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இங்கிலாந்துக்கெதிரான தொடருக்கான இலங்கைக் குழாமில் அகில தனஞ்சய, லக்‌ஷன் சந்தகான், மலிந்த புஷ்பகுமார ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் காணப்படுகின்றனர்.

92 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஹேரத் 430 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், இதில் 36 விக்கெட்டுகளை தவிர எஞ்சியவை 31 வயதுக்கு பின்னரே கைப்பற்றப்பட்டிருந்தன. அதிலும் 35 வயதுக்குப் பின்னர் ஹேரத் கைப்பற்றியது போல 230 விக்கெட்டுகளை எவரும் கைப்பற்றியிருக்கவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களில் தற்போது பத்தாமிடத்தில் காணப்படும் ஹேரத், தனது இறுதி டெஸ்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், ஒன்பதாமிடத்திலுள்ள றிச்சர்ட் ஹட்லி (431), எட்ட்டாமிடத்திலுள்ள ஸ்டூவர்ட் ப்ரோட் (433), ஏழாமிடத்திலுள்ள கபில் தேவ் (434) ஆகியோரை முந்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, 1990களில் அறிமுகத்தை மேற்கொண்ட தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இறுதி வீரர் ஹேரத் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .