2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முதல்நிலை அணி இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், தம்புள்ளையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் இங்கிலாந்தை, அண்மைய காலங்களில் தொடர்ச்சியாகத் தடுமாறும் இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதே மிகப்பெரிய கேள்வியாகக் காணப்படுகிறது.

எவ்வாறாயினும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளுக்கான கடினமான இடமொன்றாக இலங்கை காணப்படுகின்ற நிலையில், இலங்கையின் வழமையான ஆடுகளங்கள் போன்று மெதுவானதாக, சுழற்சியை வழங்கக் கூடியதாக இத்தொடருக்கான ஆடுகளங்கள் அமையும் பட்சத்தில் இங்கிலாந்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தற்போதைய பாணியான அதிரடி கைகொடுக்காது என்பதோடு இரண்டு அணிகளும் ஏறத்தாழ சமபலம் கொண்டவையாகவே தோற்றும்.

எனினும், அண்மைய காலத்தில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் இங்கிலாந்து முன்னேற்றத்தைக் கண்டுள்ள நிலையில், இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ள அகில தனஞ்சய, அமில அப்போன்ஸோ, தனஞ்சய டி சில்வா, லக்‌ஷன் சந்தகான் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களை இங்கிலாந்தின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான ஜோ றூட், அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், ஜொஸ் பட்லர் ஆகியோர் எதிர்கொள்வதிலேயே இத்தொடரின் போக்கு தீர்மானிக்கப்படும்.

மறுபக்கமாக, முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸை தவிர்த்து விட்டு இத்தொடரில் களமிறங்கும் இலங்கையின் புதிய அணித்தலைவர் தினேஷ் சந்திமால் உள்ளிட்ட துடுப்பாட்ட வீரர்கள் தம்மை நிரூபித்துக் காட்ட வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். வேகப்பந்துவீச்சுப் பக்கம், சிறப்பான மீள்வருகையை லசித் மலிங்க நிகழ்த்தியுள்ளமை இலங்கைக்கு பலத்தை வழங்குகின்றது.

இலங்கையில் தற்போது மழைக் காலநிலை நிலவுகின்ற நிலையில், முதலாவது, இரண்டாவது போட்டிகளின்போது மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இரண்டாவது போட்டிக்கும் ஐந்தாவது போட்டிக்கும் மாத்திரமே மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறித்த தொடரின் எந்த முடிவும் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் எட்டாமிடத்திலிருக்கும் இலங்கையைப் பாதிக்காதென்ற நிலையில், 5-0 என வெள்ளையடிக்கப்பட்டால் அல்லது 4-1 என தொடரை இழந்தால் இரண்டாமிடத்துக்கு இங்கிலாந்து கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .