2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டது ஆர்சனல்

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை ஆர்சனல் தவறவிட்டது.

எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை ஆர்சனல் தவறவிட்டது.

இப்போட்டியில், தனது சக பின்கள வீரர் லூகாஸ் டிக்னியால் நீண்ட தூரத்துக்கு எறியப்பட்ட பந்தை எவெர்ற்றனின் முன்களவீரர் டொமினிக் கல்வேர்ட்-லெவின் தலையால் முட்டி வந்த பந்தை அவ்வணியின் இன்னொரு பின்களவீரரான பில் ஜகியெல்கா 10ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலமே 1-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றிருந்தது.

குறித்த போட்டியின் முதற்பாதியில் ஆர்சனல் மோசமாகச் செயற்பட்டிருந்ததுடன், இரண்டாவது பாதியில் மேம்பட்ட முன்னேறியபோதும், எவெர்ற்றனின் கோல் காப்பாளர் ஜோர்டான் பிக்ஃபோர்ட்டை குறிப்பிடத்தக்க விதத்தில் செயற்பட்டிருக்கவில்லை. இரண்டாவது பாதியில், மத்தியகளவீரர் ஆரோன் றம்சி, முன்களவீரர் பியரி எம்ரிக் அபுமெயாங் ஆகியோர் ஆர்சனலால் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், ஆர்சனலை விட எவெர்ற்றன் மேம்பட்ட அணியாக விளங்கியிருந்தது.

மறுபக்கமாக, தாம் ஆரம்பத்தில் பெற்ற முன்னிலையை இரட்டிப்பாக்கும் வாய்ப்புகளை எவெர்ற்றனின் முன்களவீரர்களான பெர்னார்ட், றிச்சர்லிசன், ஜைல்பி சிகூர்ட்ஸன் ஆகியோர் கொண்டிருந்தபோதும், அவர்கள் அவற்றை கோலாக்கத் தவறியிருந்தனர்.

இந்நிலையில், போட்டியின் இறுதிக் கணங்களில் டொமினிக் கல்வேர்ட்-லெவின்னுடன் ஆர்சனலின் பின்கள வீரர் ஸ்கொட்ரான் முஸ்தாபி மோதியிருந்ததைத் தொடர்ந்து, ஆர்சனலின் முகாமையாளர் உனை எம்ரேயும் எவெர்ற்றனின் முகாமையாளர் மார்கோ சில்வாவும் கோபமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதுதவிர, குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் பிரதியிடப்பட்டிருந்த ஆர்சனலின் மத்தியகளவீரரான மெசுட் ஏஸில், மார்கோ சில்வாவை நோக்கிய திசையில் தனது அங்கியை எறிருந்திருந்த நிலையில் அவரும் குறித்த வாக்குவாதத்தில் பங்கெடுத்திருந்தார்.

அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் காணப்படுகின்றநிலையில், 63 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. செல்சியும் 63 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது. 61 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X