2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூன்றாவது சுற்றில் ஹலெப், பெடரர்

Editorial   / 2018 ஜனவரி 18 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற உலகின் முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், உலகின் இரண்டாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர, உலகின் நான்காம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்ம் ஆகியோர் மூன்றாவது சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

சிமோனா ஹலெப், 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கனடாவின் யூகினி புஷார்ட்டை வென்றார்.

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-1, 7-6 (7-4)  என்ற நேர் செட்களில் லத்தீவியாவின்  அனஸ்டாஸி செவஸ்டோவாவை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இந்நிலையில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கர்பினியா முகுருஸா, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-7 (1-7), 4-6 என்ற செட்களில் தாய்வானின் ஷேக் சூ வெய்யிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் நடப்புச் சம்பியனான ரொஜர் பெடரர், 6-4, 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் ஜேர்மனியின் ஜங் லியூங் ஸ்ரோவ்வை வென்றார்.

அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சக ஜேர்மனி வீரரான பீற்றர் கொவாஸ்கேயை வென்றார்.

டொமினிக் தெய்ம், 6-7 (6-8), 3-6, 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை போராடி வென்றார்.

ஆறு தடவைகள் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியனான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 4-6, 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கயேல் மொன்பில்ஸை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .