2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மூன்றாவது சுற்றுடன் வெளியேறியது யுனைட்டெட்

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில் மூன்றாவது சுற்றுடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.

தமது மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று  அதிகாலை இடம்பெற்ற டேர்பி கவுண்டி அணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில் தோற்றதன் மூலமே தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டது.

குறித்த போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் ஜுவான் மாத்தா பெற்ற கோலின் மூலம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட், முதற்பாதி முடிவு வரைக்கும் அதே முன்னிலையுடன் தொடர்ந்தது.

பின்னர், போட்டியின் 59ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 30 அடி தூரத்திலிருந்தான பிறீ கிக் மூலம் கோலொன்றைப் பெற்ற டேர்பி கவுண்டி அணியின் ஹரி வில்சன் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்த எட்டாவது நிமிடத்தில், ஹரி வில்சன் கோலொன்றைப் பெற எத்தனிக்கையில் பெனால்டி பகுதிக்கு வெளியே பந்தைக் கையாண்ட மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் சேர்ஜியோ றொமேரோ சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பின்னர், 85ஆவது நிமிடத்தில் ஜக் மரியோட் தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலம் டேர்பி கவுண்டி அணி முன்னிலை பெற்றது. எனினும் மாற்று வீரராகக் களமிறங்கிய மர்வான பெலைனி தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்திய மன்செஸ்டர் யுனைட்டெட், போட்டியை பெனால்டிக்கு எடுத்துச் சென்றது.

பெனால்டியில், முதல் 15 பெனால்டி உதைகளையும் இரண்டு அணி வீரர்களும் வெற்றிகரமாக செலுத்தியிருந்த நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பில் ஜோன்ஸின் உதையை டேர்பி கவுண்டி அணியின் கோல் காப்பாளர் ஸ்கொட் கர்சன் தடுக்க 8-7 என்ற ரீதியில் பெனால்டியில் வென்ற டேர்பி கவுண்டி குறித்த தொடரின் நான்காவது சுற்றுக்குச் செல்ல, மன்செஸ்டர் யுனைட்டெட் தொடரிலிருந்து வெளியேறியது.

இதேவேளை, ஒக்ஸ்போர்ட் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று  அதிகாலை இடம்பெற குறித்த தொடரின் பிறிதொரு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி அணி, நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, கப்ரியல் ஜெஸூஸ், றியாட் மஹ்ரேஸ், பில் பொடென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X