2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான 2ஆவது டெஸ்ட் நாளை: படுதோல்வியிலிருந்து மீளுமா இங்கிலாந்து?

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, அன்டிகுவாவில் இலங்கை நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

முதலாவது போட்டியில் படுதோல்வியைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து மிகுந்த அழுத்தத்துக்குள்ளாகியுள்ளது. அணித்தெரிவிலிருந்து இரண்டாவது இனிங்ஸில் ஒவ்வொரு துடுப்பாட்டவீரரும் எவ்வாறு ஆட்டமிழந்தனர் என்றவரையில் விமர்சனங்கள் தொடருகின்றன.

அந்தவகையில், இங்கிலாந்தின் பிரச்சினையானது ஆரம்பத் துடுப்பாட்டவீரரிலிருந்து ஆரம்பிக்கின்றது. சுழற்பந்துவீச்சை கீட்டன் ஜெனிங்ஸ் சிறப்பாக எதிர்கொண்டாலும் தொடர்ச்சியாக அவர் வேகப்பந்துவீச்சில் தடுமாறி வருகிறார். ஆக, இப்போட்டி இவருக்கான இறுதிச் சந்தர்ப்பமாக காணப்படும். அல்லது இவரை ஜோ டென்லியால் பிரதியீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஜோ டென்லி, சுழற்பந்துவீச்சை வீசக்கூடியவர் என்பது இங்கிலாந்துக்கு மேலதிக பலம்.

இதேவேளை, சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட்டைத் தாண்டி சாம் கர்ரன் அணியில் தெரிவுசெய்யப்பட்டது விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில், இப்போட்டியில் கர்ரனை ப்ரோட் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, மொயின் அலி, அடில் ரஷீட் என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தியிருக்காத நிலையில், அடில் ரஷீட்டை ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஜேக் லீச் அணியில் இடம்பெறலாம்.

இந்த மாற்றங்கள் தவிர, அணித்தலைவர் ஜோ றூட், ஜொனி பெயார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோர் குறிப்பிடத்தக்களவான ஓட்டங்களைப் பெற்றாலே தொடர் வெற்றியைப் பற்றி இங்கிலாந்து சிந்திக்கலாம்.

மறுபக்கமாக, முதலாவது போட்டியில் அபார வெற்றிபெற்ற அதே மேற்கிந்தியத் தீவுகள் அணியே இப்போட்டியிலும் களமிறங்குமென்றபோதும் சிரேஷ்ட வீரர் டரன் பிராவோவிடமிருந்து குறிப்பிடத்தக்களவான பெறுபேற்றை அவ்வணி எதிர்பார்க்கும். தவிர, முதலாவது போட்டியில் பெற்ற வெற்றியைப் பற்றிக்கொண்டு, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மூன்றாமிடத்திலிருக்கும் இங்கிலாந்துடனான தொடர் வெற்றியுடன் இவ்வாண்டை வெற்றிகரமாக ஆரம்பிக்க மேற்கிந்தியத் தீவுகள் விரும்பும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .