2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது அவுஸ்திரேலியா

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் மகளிர் உலகக் கிண்ணத் தொடரில், மேற்கிந்தியத் தீவுகளை, அவுஸ்திரேலியா வென்றது.  

டெளன்டனில், நேற்று (26) இடம்பெற்ற குறித்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவி ஸ்டஃபானி டெய்லர், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். பின்னர், தமது அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் எனத் தெரிவித்தார். எவ்வாறெனினும், சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி விதிமுறைகளுக்கமைய, மேற்கிந்தியத் தீவுகள் அணியே முதலில் துடுப்பெடுத்தாடியது.  

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகளின் முதல் ஐந்து வீராங்கனைகளில் நால்வர், ஆரம்பத்தில் ஓட்டங்களைப் பெற்றபோதும், போட்டியில் தாக்கம் செலுத்தக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை எவரும் பெறவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இனிங்ஸில் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.  

அந்தவகையில், 47.5 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை, மேற்கிந்தியத் தீவுகள் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஹேலி மத்தியூஸ் 46 (63), ஸ்டஃபானி டெய்லர் 45 (57), செடியன் நேஷன் 39 (73), தெயேந்திரா டொட்டின் 29 (20) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், எலைஸ் பெரி 3, கிறிஸ்டன் பீம்ஸ், ஜெஸ் ஜொனாசென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

பதிலுக்கு, 205 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 38.1 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து, 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில், நிக்கோல் போல்டன் ஆட்டமிழக்காமல் 107 (116), பெத் மூனி 70 (85) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்டஃபனி டெய்லர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

போட்டியின் நாயகியாக, நிக்கோல் போல்டன் தெரிவானார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X