2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மொனாக்கோ கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் றிச்சியார்டோ

Editorial   / 2018 மே 28 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரச்சினைகளைச் சந்தித்த தனது காருடனேயே பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலைத் முந்த விடாமல் தடுத்து மொனாக்கோ கிரான்ட் பிறிக்ஸில் றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிச்சியார்டோ வென்றார்.

இந்த கிரான்ட் பிறிக்ஸின் பயிற்சிகள் மூன்றிலும் வேகமானவராகக் காணப்பட்டிருந்த டானியல் றிச்சியார்டோ, நேற்று இடம்பெற்ற பந்தயத்தை முதலாவது நிலையிலிருந்து ஆரம்பித்து முதலாவதாகவே பந்தயத்தில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், இந்த கிரான்ட் பிறிக்ஸில் ஏனையோரைப் போல ஒற்றை இடைநிறுத்தத்தை 17ஆவது சுற்றில் மேற்கொண்ட டானியல் றிச்சியார்டோ, அதன்பின்னரே தனது கார் இயந்திரத்திலிருந்து சக்தி இழப்பை எதிர்கொண்டார்.

எவ்வாறெனினும், மிகுதி 50 சுற்றுக்களிலும் செபஸ்டியன் வெட்டலை முந்த விடாமல் டானியல் றிச்சியார்டோ முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். அனைத்து ஓட்டுநர்களும் ஒரு இடைநிறுத்தத்துடன் தங்களது டயர்களைப் பாதுகாப்பதற்காக குறிப்பிட்டளவான வேகத்திலேயே சென்றதும் டானியல் றிச்சியார்டோவுக்கு சாதகமாய் அமைந்திருந்தது.

எனினும், 25 சதவீதமான இயந்திர சக்தியை இழந்த நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் 2.5 செக்கன்களை இழந்தே பந்தயத்தை றிச்ச்யார்டோ நிறைவு செய்திருந்தார்.

இதேவேளை, மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் மூன்றாமிடத்தைப் பெற்றதோடு, பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன் நான்காமிடத்தைப் பெற்றதோடு, மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் ஐந்தாமிடத்தைப் பெற்றார்.

அந்தவகையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், 110 புள்ளிகளுடன் லூயிஸ் ஹமில்டன் முதலிடத்தில் உள்ளதுடன், ஹமில்டனை விட 14 புள்ளிகள் குறைவாக 96 புள்ளிகளைப் பெற்றுள்ள செபஸ்டியன் வெட்டல் இரண்டாமிடத்திலுள்ளார். மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களில் முறையே 72, 68, 60 புள்ளிகளுடன் டானியல் றிச்சியார்டோ, வல்டேரி போத்தாஸ், கிமி றைக்கோனன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .