2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யூரோ கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றது ஸ்பெய்ன்

Editorial   / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கு ஸ்பெய்ன் தகுதி பெற்றுள்ளது.

சுவீடனில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியொன்றை சமநிலையில் முடித்தமையைத் தொடர்ந்தே அடுத்தாண்டு இடம்பெறவுள்ள யூரோ கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது.

நோர்வேக்கெதிரான தமது கடைசிப் போட்டியில் மஞ்சள் அட்டை காட்டப்பெற்றிருந்த தமதணித்தலைவரும் பின்களவீரருமான சேர்ஜியோ றாமோஸ் இப்போட்டியில் இடைநிறுத்தப்பட்டிருந்தபோதும் வலது பக்கமும், இடது பக்கமும் பந்தை நகர்த்தி சுவீடனின் பின்களத்துக்குள் சென்று சிறப்பாகவே இப்போட்டியை ஸ்பெய்ன் ஆரம்பித்திருந்தது.

இப்போட்டியில் ஸ்பெய்னை ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்தக்கூடிய வாய்ப்பை அவ்வணியின் மத்தியகளவீரர் தியாகோ அல்கான்டரா கொண்டிருந்தபோதும், சுவீடனின் கோல் காப்பாளர் றொபின் ஒஸ்லெனைத் தாண்டியபோதும், பந்தைக் கட்டுப்படுத்த அவர் தவறிய நிலையில் பந்து களத்துக்கு வெளியில் சென்றிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்பெய்னின் மத்தியகளவீரர் றொட்றியின் கோல் கம்பத்தை நோக்கிய உதை தடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுவீடனின் கோல் கம்பத்தை நோக்கிய முதலாவது உதையை 27ஆவது நிமிடத்தில் அவ்வணியின் பின்களவீரர் மிக்கேல் லுஸ்டிக் கொண்டிருந்ததுடன், இதைத் தொடர்ந்த சுவீடனின் முன்களவீரர் றொபின் குவைஸைன் கோல் கம்பத்தை நோக்கித் தலையால் முட்டியதை ஸ்பெய்னின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா மூலையுதையொன்றுக்கு அனுப்பியிருந்தார்.

அந்தவகையில், 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முதற்பாதி முடிவடைந்திருந்த நிலையில் இரண்டாவது பாதியில் சுவீடனின் மத்தியகளவீரர் எமில் ஃபொர்ஸ்பேர்க்கின் கோல் கம்பத்தை நோக்கிய உதை தடுக்கப்பட்டிருந்ததுடன், முன்களவீரர் மார்க்கஸ் பேர்க் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டியது தடுக்கப்பட்டிருந்தபோதும், கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து 50ஆவது நிமிடத்தில் மார்க்கஸ் பேர்க் பெற்ற கோல் மூலம் சுவீடன் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் கோல் பெறும் வாய்ப்புகளை ஸ்பெய்னால் உருவாக்க முடியாதபோதும், போட்டியின் இறுதி நிமிடங்களில் மாற்றுவீரராகக் களமிறங்கிய தமது முன்களவீரர் றொட்றிகோ மூலையுதையொன்றிலிருந்து பந்தைப் பெற்று கோலைப் பெற்றிருந்த நிலையில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டியை ஸ்பெய்ன் முடித்திருந்தது.

இதேவேளை, லிச்னெஸ்டைனில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஜே போட்டியொன்றில் 5-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றிருந்தது. இத்தாலி சார்பாக, அன்ட்ரயா பெலோட்டி இரண்டு கோல்களையும், ஃபெடெரிக்கோ பெர்ணார்ட்டெக்கி, அலெஸியோ றோமன்கோலி, ஸ்டீபன் எல் ஷவாரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தமது நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அயர்லாந்துடனான குழு டி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிற்ஸர்லாந்து வென்றிருந்தது. சுவிற்ஸர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரிஸ் செஃபெரோவிச் பெற்றிருந்ததோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .