2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யுனைட்டெட்டை வென்றது பார்சிலோனா

Editorial   / 2019 ஏப்ரல் 11 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வென்றது.

இப்போட்டியில், சக மத்தியகளவீரர் சேர்ஜியோ புஷ்கட்ஸ் வழங்கிய பந்தை பார்சிலோனாவின் அணித்தலைவரும் முன்களவீரருமான லியனல் மெஸ்ஸி, தனது சக முன்களவீரர் லூயிஸ் சுவாரஸிடம் வழங்க, அவர் அதை தலையால் முட்டியிருந்த நிலையில், அது மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரர் லுக் ஷாவின் தோட்பட்டையில் பட்டு போட்டியின் 12ஆவது நிமிடத்தில் ஓவ்ண் கோலானதோடு பார்சிலோனா முன்னிலை பெற்றது. முதலில், உதவி மத்தியஸ்தரால் ஓஃப் சைட் எனக் காண்பிக்கப்பட்டிருந்தபோதும், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் மூலம் பின்னர் கோலாகியிருந்தது.

குறித்த கோலைத் தொடர்ந்து, பார்சிலோனாவின் இன்னொரு மத்தியகளவீரரான பிலிப் கோச்சினியோவின் போட்டியின் 36ஆவது நிமிடத்திலான கோல் கம்பத்தை நோக்கியதான உதையை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா அபாரமாகத் தடுத்திருந்தார்.

இதேவேளை, பார்சிலோனாவின் பின்களவீரர் ஜெராட் பிகேயால், குறித்த போட்டியில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரரான ஸ்கொட் மக்டொமினி வீழ்த்தப்பட்டிருந்தபோதும் பெனால்டி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், போட்டியின் முதற்பாதியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு கிடைத்த சிறந்த கோல் பெறும் வாய்ப்பாக, அவ்வணியின் மத்தியகளவீரரான மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், சக பின்களவீரர் டியகோ டலொட்டிடம் பந்தை வழங்கியபோதும், அவர் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்துக்கு வெளியேயே சென்றிருந்தது.

அந்தவகையில், இரண்டாவது பாதியில் தமது ஆட்டத்தை மன்செஸ்டர் யுனைட்டெட் மேம்படுத்தியபோதும் கோல் கம்பத்தை நோக்கி எந்தவொரு உதையையும் கொண்டிருக்கவில்லை. சக பின்களவீரர் நெல்சன் செமிடோவிருந்தான நுட்பமான பந்தை, கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்து தமது முன்னிலையை இரட்டிப்பாக்கும் வாய்ப்பை லூயிஸ் சுவாரஸ் தவறவிட்டிருந்தார். பின்னர், பார்சிலோனாவின் பின்களவீரரான ஜோர்டி அல்பாவிம் உதையொன்றை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா தடுத்திருந்த நிலையில், இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.

இந்நிலையில், நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஜுவென்டஸ் முடித்திருந்தது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருந்ததுடன், அஜக்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை டேவிட் நெரெக்ஸ் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .