2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ரொனால்டோவின் இறுதி நேர பெனால்டியால் அரையிறுதியில் றியல் மட்ரிட்

Editorial   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், ஜுவென்டஸுடனான காலிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டியில், றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இறுதி நேரத்தில் பெனால்டி மூலம் பெற்ற கோல் காரணமாக அரையிறுதிப் போட்டிக்கு றியல் மட்ரிட் தகுதிபெற்றது.

கடந்த பருவகால சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் தம்முடன் மோதிய ஜுவென்டஸுடனான காலிறுதிப் போட்டியின் முதலாவது சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற காலிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றின் இரண்டாவது நிமிடத்திலேயே ஜுவென்டஸின் சமி கெதீரா கொடுத்த பந்தை அவரின் சக வீரரான மரியோ மண்டூஸிக் தலையால் முட்டிக் கோலாக்க அனுமதித்தது.

இதையடுத்து ஸ்பானிய லா லிகா நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் சுதாகரித்துக் கொண்டது. எனினும் அவ்வணியின் முன்கள வீரரான கரித் பேலின் அபாரமான உதையை இத்தஆலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி புபான் தடுத்ததுடன், தடுத்தயைடுத்து நகர்ந்த பந்தை பின் காலால் கரித் பேல் உதைந்தபோது அது கோல் கம்பத்தின் வெளியே சென்றிருந்தது.

தொடர்ந்த ஆட்டத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ உதைந்த உதையை ஜல்லலூயிஜி புபான் தடுக்க, வந்த பந்தை றியல் மட்ரிட்டின் இஸ்கோ கோலாக்கியபோதும் ஓவ் சைட் காரணமாக குறித்த கோல் நிராகரிக்கப்பட்டது. பின்னர், கிறிஸ்டியானோ ரொனால்டோ கொடுத்த பந்தொன்றை கோல் கம்பத்தை நோக்கி இஸ்கோ செலுத்தியபோதும் அதை அபாரமாக ஜல்லூயிஜி புபான் மீண்டும் தடுத்திருந்தார்.

இதையடுத்து, போட்டியின் 37ஆவது நிமிடத்தில், ஜுவென்டஸின் ஸ்டெபான் லிச்னெய்டர் கொடுத்த பந்தை தலையால் முட்டி கோலாக்கிய மரியோ மண்டூஸிக், றியல் மட்ரிட்டுடனான மொத்த கோல் எண்ணிக்கை வித்தியாசத்தை ஒன்றாகக் குறைந்த்துக் கொண்டார். பின்னர் முதற்பாதி முடிவடையும் தருணத்தில், றியல் மட்ரிட்டின் டொனி க்றூஸ் கொடுத்த பந்தை அவரின் சக வீரர் ரபேல் வரானே கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்தியபோதும் அது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், போட்டி முடிவடைய 30 நிமிடங்களிருக்கையில், றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் பந்தைப் பிடிக்கத் தவற, அதை ஜுவென்டஸின் பிளெய்ஸி மத்தியூடி கோலாக்கி மொத்த கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இதையடுத்து முன்னிலை பெறுவதற்கு றியல் மட்ரிட் முயன்றபோதும், இஸ்கோவின் உதையொன்றை ஜல்லூயிஜி புபான் அபாரமாகத் தடுத்ததுடன், ரபேல் வரானேயின் உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்தது.

இந்நிலையில், போட்டி முடிவடையும் தருணங்களில், கிறிஸ்டியானோ றொனால்டோ தலையால் முட்டி கொடுத்த பந்தை, மாற்று வீரராகக் களமிறங்கிய றியல் மட்ரிட்டின் லூகாஸ் வஸ்கூஸ் கட்டுப்படுத்த முயல்கையில், ஜுவென்டஸின் மெஹ்டி பெனட்டியால் வீழ்த்தப்பட பெனால்டி வழங்கப்பட்டது.

இதையடுத்து, பெனால்டி வழங்கியதற்கு மத்தியஸ்தர் மைக்கல் ஒலிவருடன் வாக்குவாதப்பட்ட ஜல்லூயிஜி புபானுக்கு நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பெற்று ஆடுகளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பெனால்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலைப் பெற, இப்போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றபோதும் 4-3 என்ற மொத்த கோல் கணக்கில் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக றியல் மட்ரிட் தகுதிபெற்றுக் கொண்டது.

இதேவேளை, ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியின் முதலாவது சுற்றியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்த ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற காலிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்து 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .