2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

றியலை வென்று சம்பியனானது அத்லெட்டிகோ

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதான இரண்டு தொடர்களான சம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் சம்பியன்களுக்கிடையில் நடைபெறும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பின் சுப்பர் கிண்ணப் போட்டியில் யூரோப்பா லீக்கின் நடப்புச் சம்பியன்களான அத்லெட்டிகோ மட்ரிட் சம்பியனானது.

ஸ்பெய்ன் தலைநகர் மட்ரிட்டைத் தளமாகக் கொண்ட லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட், மட்ரிட்டைத் தளமாகக் கொண்ட இன்னொரு லா லிகா கழகமும் சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களுமான றியல் மட்ரிட்டை வென்றே சம்பியனானது.

எஸ்தோனியாவின் தலைநகர் டலின்னில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற குறித்த போட்டியின் 49ஆவது செக்கனிலேயே, நீண்ட துரப் பந்துப்பரிமாற்றமொன்றை கோலாக்கிய அத்லெட்டிகோ மட்ரிட்டின் டக்ளஸ் கொஸ்டா தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர், போட்டியின் 27ஆவது நிமிடத்தில் சக வீரர் கரித் பேலுடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய கரின் பென்ஸூமா கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார். தொடர்ந்த ஆட்டத்தில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் பின்கள வீரர் ஜுவன்பிரானின் கையில் பெனால்டி பகுதிக்குள் வைத்து பந்து பட வழங்கப்பட்ட பெனால்டியை றியல் மட்ரிட்டின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் கோலாக்க றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும், போட்டியின் 79ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கருலிருந்து கோலைப் பெற்ற டியகோ கொஸ்டா கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார். பின்னர், போட்டியின் வழமையான முடிவு நிமிடங்களில் கரித் பேலிடமிருந்து பந்தொன்றைப் பெற்று கோல் பெறும் இலகுவான வாய்ப்பை றியல் மட்ரிட்டின் பின்கள வீரர் மார்ஷெலோ தவறவிட்டிருந்தார்.

அந்தவகையில், போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில், போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது.

மேலதிக நேரத்தின் 98ஆவது நிமிடத்தில், றியல் மட்ரிட்டின் பின்கள வீரர் ரபேல் வரான் பந்தை இழக்க, தோமஸ் பார்ட்டியிடமிருந்து வந்த பந்தைக் கோலாக்கிய சாவுல் நிகூஸ் அத்லெட்டிகோ மட்ரிட்டுக்கு முன்னிலை வழங்கியதுடன், 104ஆவது நிமிடத்தில் கொகே பெற்ற கோலுடன் இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற அத்லெட்டிகோ மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பின் சுப்பர் கிண்ணத்தை மூன்றாவது முறையாகக் கைப்பற்றிக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .