2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

றோமாவை வீழ்த்தி அரையிறுதியில் ஜுவென்டஸ்

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு ஜுவென்டஸ் தகுதிபெற்றுள்ளது.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற றோமாவுடனான காலிறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு ஜுவென்டஸ் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில் சக முன்களவீரர் கொன்ஸலோ ஹியூகைனிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆரம்பத்தில் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அடுத்த 12ஆவது நிமிடத்தில் சக முன்களவீரரான டக்ளஸ் கொஸ்டாவுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்து கோலைப் பெற்ற ஜுவென்டஸின் மத்தியகளவீரரான றொட்றிகோ பென்டாக்கூர் ஜுவென்டஸின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இதையடுத்து முதலாவது பாதியின் முடிவில், டக்ளஸ் கொஸ்டாவிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய ஜுவென்டஸின் பின்களவீரரான லியனார்டோ பொனுச்சி, ஜுவென்டஸின் முன்னிலையை 3-0 என்ற கோல் கணக்கில் அதிகரித்தார்.

இந்நிலையில், இரண்டாவது பாதியின் ஐந்தாவது நிமிடத்தில் கோல் கம்பத்தை நோக்கிய றோமாவின் முன்களவீரர் செங்கிஸ் அன்டரின் உதையானது கோல் கம்பத்தில் பட்டு, ஜுவென்டஸின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி புபானில் பட்டுக் கோலாக, ஜுவென்டஸின் முன்னிலையை இரண்டு கோல்களாக றோமா குறைத்தது.

எவ்வாறெனினும், பின்னர் அபாரமான இரண்டு தடுப்புக்களை ஜல்லூயிஜி புபான் மேற்கொண்ட நிலையில், இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஜுவென்டஸ், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .