2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

றோமாவை வென்றது லிவர்பூல்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், லிவர்பூலின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில், சக வீரர் றொபேர்ட்டோ பெர்மினோ வழங்கிய இரண்டு பந்துப்பரிமாற்றங்களை கோல் கம்பத்துக்கு மேலால் லிவர்பூலின் சாடியோ மனே செலுத்தியிருந்ததுடன், அன்றூ றொபேர்ட்சனிடமிருந்து வந்த பந்தை கோலாக்கியபோது ஓவ் சைட்டில் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில், றோமாவின் எடின் டெக்கோவிடமிருந்து லிவர்பூலின் அணித்தலைவர் ஜோர்டான் ஹென்டர்ஸன் பந்தைப் பறித்ததைத் தொடர்ந்து, சாடியோ மனே, றொபேர்ட்டோ பெர்மினோவின் பங்களிப்போது கோலொன்றைப் பெற்ற மொஹமட் சாலா லிவர்பூலுக்கு முன்னிலையை வழங்கினார். பின்னர் முதற்பாதியின் இறுதி நிமிடத்தில், றொபேர்ட்டோ பெர்மினோவிடமிருந்து பெற்ற பந்தை மொஹமட் சாலா கோலாக்கியதோடு முதற்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை பெற்றுக் காணப்பட்டது.

இதன்பின்னர் இரண்டாவது பாதியில், போட்டியின் 56ஆவது நிமிடத்தில் மொஹமட் சாலா கொடுத்த பந்தை சாடியோ மனே கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற லிவர்பூல், அடுத்த ஆறாவது நிமிடத்தில் மொஹமட் சாலா கொடுத்த பந்தை றொபேர்ட்டோ பெர்மினோ கோலாக்க 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் அடுத்த ஏழாவது நிமிடத்தில் ஜேம்ஸ் மில்னரின் மூலையுதையை றொபேர்ட்டோ பெர்மினோ தலையால் முட்டிக் கோலாக்க 5-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை பெற்றது.

தொடர்ந்த ஆட்டத்தில், போட்டி முடிவடைய ஒன்பது நிமிடங்களிருக்கையில், றோமாவின் றட்ஜா நைங்கொலன் கொடுத்த பந்தை எடின் டெக்கோ கோலாக்கியதோடு, அடுத்த நான்காவது நிமிடத்தில், றட்ஜா நைங்கொலனின் உதையை ஜேம்ஸ் மில்னர் கையால் தடுக்க வழங்கப்பட்ட பெனால்டியை டியகோ பெரோட்டி கோலாக்கியதோடு, தமது மைதானத்தில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்பதாக 2-5 என்ற கோல் கணக்கில் பின்தங்கியவாறு குறித்த போட்டியை றோமா முடித்துக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .